பக்கம் எண் :

பக்கம் எண் :413

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை

வேண்டியிருப்பதுபற்றி "எண்ணல்" என்றார். அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு, அதனோடியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல்'' அருத்தம்-பொருள்; ஆபத்தி-பிறிதொரு பொருள். "அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே" (சிவ. சித்தி. அளவை. உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப்படும்.கங்கேசர் முதலிய ஆசிரியன்மார்,இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவதென்றோதி, "பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்" என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண்டெனத் துணிந்து, "பகலுண்ணா" னெனவே, "இரவிலுண்பான்" எனத் துணிந்து "சாத்தன் இரவில் உண்பன்" எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப,

      "யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்:
      இவன் பருத்திருக்கின்றான் ;
      ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான்,
      "யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல்
      இவன் பகலில் உண்ணான் : [உண்டல்வேண்டும்;
      ஆகவே, இவன் இரவில்உண்போனாவான்."

6 - இயல்பளவை

47--8.இயல்பு - இயல்பளவையாவது, யானைமேல் இருந்தோன் - யானையின் பிடரி மேலிருப்போன் ஒருவன் ; தோட்டிக்கு அயல் ஒன்று ஈயாது-கோலொன்று கொடுப்பதாயின் தன் கையில் உள்ள தோட்டியின் வேறாக ஒன்றும் கொடாது ; அதுவே கொடுத்தல்- அத் தோட்டியினையே கொடுப்பதாம் எ - று.

யானைமேல் இருப்பவன் கையில் தோட்டியல்லதுபிறிதொருகோல் இன்மையின், கோல்கேட்டவழி அத்தோட்டியினைக் கொடுத்தல் அவற்கியல்பாதலால், இஃது இயல்பளவை யெனப்பட்டது; இதனைச் சுபாவவளவை யென்றும் கூறுப. இதனையே பிறரும், "மாமே லிருந்தொரு கோறா வெனிற்சுள்ளிக் கோறரலும், சோமே லிருந்தொரு கோறா வெனிற்றரவேதுணிந்து, பூமேவு கண்ணழுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே, நாமே வியல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்று விளக்கினர். வேறு சில ஆசிரியன்மார், இவ்வியல்பளவைக்கு வேறாகச் சட்டையென ஒன்றைத் தொடுத்துரைப்பர்.

7. ஐதிகவளவை

49--50.  ஐதிகமென்பது - ஐதிகமென்னும் அளவையாவது ; உலகுரை - உலகோராற் கேள்வி வழியாகக் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சொற்பொருளாகும் ; இம்மரத்து எய்தியது