|
ஓர் பேய் உண்டு எனத்
தெளிதல்-இம்மரத்தில் வந்திருப்பதாகிய ஒரு பேய் உண்டு என்று உலகவர் கூறுவதை
யுடன்பட்டொழிவது எ - று.
ஒருவரும் கண்ணிற் காணாராயினும்,
பலரும் உண்டென்ப தொன்றே பற்றி யுடன்பட்டொழிவது ஐதிகவளவையாயிற்று. "உலகத்தா
ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பதும்
இதனை யுட்கொண்டிருப்பது காண்க. பிறரும், "கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங்குவலயத்தோர்,
அன்புடனாலிலலகையுண் டென்பர்க ளென்பதுவும், மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப
ரென்பதுவும், என்பர் கணாவல ரென்பது மைதிக மென்பர்களே" (சிவ. சித்தி. மறை.
மேற்.) என்ப.நியாயபாடியம், இதனை ஆகமளவைக்கண் ணடக்கி, ஆத்தனொருவனாற்
கூறப்பட்ட வழி இதுவும் ஆகமவளவையா (ii. 2 - 2) மென்று கூறுகிறது.
8.
அபாவவளவை
51--2. அபாவமென்பது-அபாவவளவை யெனப்படுவது; இன்மை ஒரு
பொருளின் இல்லாமையாம்; ஓர் பொருளை - பொருளொன்றினை ; அவ்விடத்துத் தவாது
இலை என்றல் - கூறப்படும் அவ்விடத்தே பற்றற இல்லையென்று கொள்வது எ - று.
எனவே, பொருளொன்றின் இன்மை
கூறுவது அபாவவளவையென்றும், அபாவமென்பது இன்மையென்றும் கூறியவாறாம். பொருளொன்றின்
உண்மையின்மைகளைக் குறித்துச் சொல்நிகழுமிடத்து, இடமும் காலமும் முதலிய வியைபு
பற்றியே நிகழுமாகலின், அவற்றுள்ளும் இடத்தையே சிறப்பித்து, "அவ்விடத்து"
என்றும், சிறிது எஞ்சக் கூறிய வழியும் இன்மை பெறப்படாமையின், "தவாது இல்லை
என்றல்" என்றும் கூறினான். என்றும்பாவம், முன்னபாவம், ஒன்றினொன்ற பாவம்,
அழிவுபாட்டபாவம் எனப் பகுத்து ஆராய்தலுமுண்டு,அவற்றை விரிந்த நூல்களுட் காண்க.
உள்ளதொன்றின் உண்மைகொண்டு அதனோடியைபுடைய பிறிதொன்றின் இன்மையுணர்வு
அபாவமாகாது; அஃது அனுமானத்தினடங்கு (நியா. பா. ii. 2-2) மென்றும், காரியத்தினுண்மை
காரணத்தினுண்மை யுணர்த்துவதுபோலக் காரியத்தின் இன்மை காரணத்தின் இன்மை
யுணர்த்துமென்றும், ஆகமவளவை யானும் அபாவம் பெறப்படுமென்றும் -நியாயகந்தலி,
குசுமாஞ்சலி. நியாயமஞ்சரி முதலிய நூல்கள் கூறுகின்றன.
9.
மீட்சியளவை
53--4. மீட்சி-மீட்சியளவையாவது ; இராமன் வென்றான்
என - இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமன் வென்றான் என்ற வழி
; மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்- அறமாண்பில்லாத இராவணன் தோற்றானென்பதை
யுணர்ந்து கோடலாம் எ - று.
|