|
மீட்சியாவது "ஒழிவறிவு"
(மணி. 27: 11) என்றாராகலின் ஈண்டு வாளாது மீட்சி யென்றொழிந்தார். இராமனோடு
பொருதற்கு முன்பு காறும் துணைசெய்து போந்த அறம், இராமனது பகைபெற்ற வழித்
துணையின்றிக் கழிந்தமையின், "மாட்சியில் இராவணன்" என்றார். வென்றோன்
பாலுளதாகும் மாட்சி தோற்றோன்பால் இலதாதல் பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம்.
இவ்வளவையைப் பாரிசேடமென்றும் ஒழிபென்றும் கூறுப. "சீரா ரொழிபென்று செப்பப்
படுவது திண் புவிமேற், போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப்,
பாராரி ராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து, நேராமிராவணன் றோற்றசொல்
லாகி நிகழ்வதுவே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்றார் பிறரும். நன்னூல்,
சிவஞானபோதம், சிவஞானசித்திமுதலியநூலுரைகளில் சிவஞான யோகிகள் இப் பாரிசேடத்தைப்
பலவிடங்களில் எடுத்தாளுதல் காண்க. சில மீமாஞ்சை நூல்களுள் இது தனித்ததோ
ரளவையாகக் கொள்ளப்படுகிறது.
10.
உள்ளநெறியளவை
55--6. உள்ளநெறி யென்பது - சம்பவ வளவையாவது; நாராசத் திரிவில்
- இருப்புத்துண்டின் சுழற்சியால்; கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல் - கொள்ளக்
கிடப்பது காந்தமென்று சொல்வதாம் எ - று.
இதனையே மேலே எய்தியுண்டாநெறி
யென்றார். பிறரெல்லாம் சம்பவமென்றும் உண்மையென்றும் வழங்குப. நாராசம்
- இருப்புத் துண்டு. காந்தமேறிய இருப்புத்துண்டு சலிப்பது உண்மை; சலிப்பினால்
காந்த முண்மை துணிவது சம்பவமாயிற்று. முதலின்கண் சினையுண்மையும், தொகுதிக்கண்
பகுதியுண்மையும் ஆயிரத்தில் நூறுண்மையும், நூற்றின்கண் தொண்ணூறுண்மையும் சம்பவமென்றும்,
இது கருதலளவைக்கண் அடங்குமென்றும் நையாயிகர் கூறுவர். இயற்கைப் பொருளை யிற்றெனக்
கிளத்தலும் இதன்கண் அடங்குமெனக்கொண்டு, "துயக்கற வுண்மை யெனநா வலர்க டுணிந்துரைப்ப,
தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின், வியக்குற்ற கால்சலிக்கும்தீச்
சுடும்விய னீர்குளிரும்,வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே" (சிவ.
சித். மறைஞா. மேற்.) என்று கூறுவாருமுளர்.
2.
பிரமாணாபாசங்கள்
57--61.பிரமாணாபாசங்கள் எட்டுள - மேலே காட்சி முதல்
உள்ள நெறி யீறாகக் கூறிய பிரமாணம் பத்திற்கும் ஆகாவென விலக்கப் பட்ட
குற்றங்கள் எட்டு உள்ளன; சுட்டுணர்வு - பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வும்;
திரியக்கோடல் - திரிபுக் காட்சியும்; ஐயம் - ஐயக்காட்சியும்; தேராது தெளிதல்
- தேராத் தேற்றமும்; கண்டுணராமை - அறிவறியாமையும்; எய்தும் இல்வழக்கு-
|