பக்கம் எண் :

பக்கம் எண் :417

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

உருவைக் குற்றியோ மகனோ எனக் கவர்வுற்றுத் துணியாதொழிதல் எ - று.

ஐயக் காட்சிக் கேதுவாகிய மையலை "ஐய" மென்றார். தறி, குற்றி முன்னர்க் "கவர்கோடல்" (மணி. 27:) என்றதும் காண்க. ஐயத்துக் கேதுவாக மையலாகிய அகக்காரணமொன்றே கூறினாராக, பதார்த்த தரும சங்கிரகமுடையார் ஒளியின்மை, சேய்மை முதலாகப் புறக்காரணமும் கூறுவர். பிற்போந்த அளவைநூலார், ஐயமும் உண்மையுணர்வுக்கு ஊக்கங் கொளுத்துமாற்றால் ஆக்கமாகக் கருதுப.

67--8.  தேராது தெளிதல்-ஆராயாது துணிதலென்பது ; செண்டு வெளியில் தறியை-செண்டாடும் வெளியிடத்து நிற்குங் குற்றியை; ஓராது-குற்றியோ மகனோ என ஆராயாமலே ; மகன் என உணர்தல் - மகனென்றே துணிந்தொழிவது எ - று.

செண்டுவெளி-குதிரைவீரர் விளையாட்டயருமிடம்; "செண்டாடுந் தொழில் மகிழ்வம்" (பெரியபு. கழறிற். 155) எனச் சான்றோர் வழங்குவது காண்க. குதிரைவீரரும் குதிரையைப் பிணிக்கும் குற்றியுமிருக்கும் செண்டுவெளியில் நிற்கும் குற்றியைக் குதிரைவீரருள் ஒருவனாக ஆராயாது மேற்கோடல் குற்றமாதல் காண்க. கூற்றுவகையால் தெளிவு தோன்றினும், ஆராய்ந்த வழி வழுவாதலின், "தேராது தெளிதல்" எனப்பட்டது. தேராத் தெளிவும் தெளிந்ததன்கண் ஐயுறவும் குற்றமென வறிக.

69--70.  கண்டுணராமை - கண்டுணராமையென்னும் பிரமாணாபாசமாவது, கடுமாப் புலியொன்று அண்டல் முதலிய - கடிய விலங்காகிய புலியொன்று நெருங்குதல் முதலியவற்றை, கண்டும் - நேரிற் கண்டுவைத்தும், அறியாமை - தம்மைப் பாதுகாவாமைக் கேதுவாகிய அறிவறியாமையாம் எ - று.

இரை விழுங்கி யுறங்கும் மாசுணம் எரியாற் சூழப்படினும் இடம் பெயராது கிடத்தல் போல, புலி முதலிய தீங்கு செய்யும் விலங்குகள் நெருங்கி வருதலை யறிந்துவைத்தும் தம்மைப் பாதுகாவாமைக்கு ஏதுவாகிய நல்லறிவின்மை, ஈண்டுக் "கண்டுணராமை" எனப்பட்டது. அறியாமை, அறிந்து பாதுகாத்தலைச் செய்யாமை. இதனை உலகோர் "அலட்சிய புத்தி" யென்றும், அளவை நூலோர், "உபேட்சாத்மக ஞானம்" என்றும் வழங்குவர். அண்டலை யென்புழி ஐ: சாரியை அண்டல், அணுகுதல்; "துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை" (ஞானசம். 197-1) என்புழிப்போல.

81--2.  இல்வழக்கென்பது - இல்வழக்கென்று சொல்லப்படுவது, முயற்கோடொப்பன - முயற்கோடு போலவரும் வழக்குக்களை, சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்-ஓசைவடிவிற்றாய சொல்லே பொருளாகக் கருத்திற் கொண்டொழிதல் எ - று.