பக்கம் எண் :

பக்கம் எண் :460

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

54--9.  பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் - பொன்னைக் கட்டளையில் உரைத்து ஓட்டங் கண்டு மாற்றினை அறுதியிடும் வண்ணக்கர் வாழும் நல்ல மாடங்களையுடைய வீதியும், பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் - மாணிக்க முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் நிலைபெற்ற வீதியும், மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் - மறையவருடைய முத்தீயோம்பல் முதலிய தொழில் குறைவுபடாத அந்தணர் வீதியும், அரசியன் மறுகும் அமைச்சியன் மறுகும் - அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும், எனைப் பெருந் தொழில் செய்யும் ஏனோர் மறுகும் - ஏனைய பெரிய தொழில்களைச் செய்யும் சேனைத் தலைவர் முதலிய ஏனையர் வீதியும், மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் - ஊர்நடுவாய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்தியும் நாற் சந்தியும்;

பொன்னுரை காணும் வண்ணக்கரும் மாணிக்கம் முதலிய விற்கும் மணிவாணிகரும் பெருஞ் செல்வராதலின், அவருறையும் வீதிகளை ஏனை அந்தணர் அரசர் அமைச்சர் முதலாயினர் வீதிகளைச்சேரக்கூறினார். தீயோம்பல் மறையோதல் முதலியன உயர்ந்தனவாகக் கருதப்பட்டமை தோன்ற, "அருந்தொழில்" என்றார். தானைத் தலைமையும், அரசியற் பணியும், நாட்டுக்கு அரணாகும் பிறசெயல்களும் புரவோர் தொழில்களைப் "பெருந்தொழில்" என்றார். மன்றம் முதலிய இடங்கள் சான்றோர் இருந்து அறங் கூறுவதற்கும் கடவுள் வழிபாடு செய்வதற்கும் உரிய வாதலின், இவற்றைப் பிரித்துக் கூறினார். ''சதுக்கமும் சந்தியும் புதுப்பூக் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" (முருகு. 225-6.) முருகனை வழிபடும் திறம் சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க.

60--8. புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்-புதிதாகக் கொணர்ந்த யானைகளையும் பொன்னாலாய கிண்கிணி மாலைகளையுடைய குதிரைகளையும் நடையில் மேம்பாடுறப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைவாதுவரும் உறையும் அழகுமிக்க வீதியும், சேண் ஓங்கு தாழ்ந்த அருவி செய் குன்றமும் - மிக்க உயரத்திலிருந்து தாழ வீழுமாறமைந்த நீரருவி பொருந்திய கட்டு மலைகளும், வேணவா மிகுக்கும் விரைமரக்காவும் - மிக்க ஆர்வத்தை மேன்மேற் றூண்டும் நறுமணச் சோலையும், விண்ணவர் தங்கள் விசும்பிடம்மறந்து- தேவர்கள் தம்முடைய விண்ணுலகத்தையும் மறந்து, நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும் - அடைதற்கு ஏற்புடைய நல்ல நீரினையுடைய பொய்கைகளும், சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்-அறச்சாலைகளும் பேரகங்களும் பொன்னாலமைந்த அம் பலமும், கொள்கை கோலம் குயின்ற இடங்களும் கண்டு மகிழ்வுற்று