44-47. விலங்கு அரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞர் இரீ இய மறுகும் - வாளாரத்தினைக் கொண்டு வெள்ளிய சங்குகளை
அறுப்போருடன் விளங்குகின்ற முத்துக்களைக் கோப்போர் இருக்கின்ற தெருவும்,
வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர்
மறுகும் - அரசர்க்காடும் கூத்து ஏனோர்க்காடுங் கூத்து என்னும் இருவகையின் இயல்பினையும்
அறிந்த நாடக மகளிர் தெருவும்;
அரத்தின் தொழில் பொருள்களைக்
குறுக்கிட்டறுப்ப தாதலால், ''''விலங்கரம்'''' எனச் சிறப்பித்தார். வளைபோழ்வது
வேளாப்பார்ப் பனர்க்கும் தொழிலெனப் பண்டை நூல்கள் கூறுகின்றன: ''''வேளாப்
பார்ப்பான் வாளரந் துமித்த வளை'''' (அகம். 24) என்பதும், ''''வேளாப் பார்ப்பான்
- யாகம் பண்ணாத பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்'''' எனவரும்
அதன் பழையவுரையும் காண்க. இருக்கையை யுடைய மறுகு, ''''இரீ இய மறு'''' காயிற்று.
கூத்தியல்பு வேத்தியலும் பொதுவியலு மென விரண்டாதலை, முன்னரும் ''''வேத்தியல்
பொதுலிய லென்றிரு திறந்துக் கூத்து'''' (மணி 2, 18-9) என்று கூறியிருத்தல் காண்க.
கூத்தியர், கூத்தாடும் மகளிர்.
48-53. எண்வகைப்பட்ட கூலம் பால்வேறாகக் குவைஇய
கூல மறுகும் எண்வகையினையுடைய கூலங்கள் வேறுவேறு பகுதி யாகக் குவிக்கப்பெற்ற
தானியக் கடைத்தெருவும், மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-அரசனிடம் நின்றேத்துவோர்
இருந்தேத்து வோர் நாழிகை யிசைக்கும் வேதாளிகர் என்போர் வீதியும், போகம்
புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-இன்பத்தினை விற்கும் பொதுமகளிர் நிறைந்த
வீதியும், கண்ணுழைகல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும்
- கண்களாற் காண்டற்கும் அரிதாகிய நுண்ணிய நூலினால் கைத்தொழின் மிக்குப்
பலநிறங்களுடன் பொருந்திய ஆடைநெய்வோரின்வளப்ப மிக்க தெருவும்;
கூலம் பால் வேறாகச் குவைஇய மறுகு
என இயைக்க எண்வகைக் கூலமாவன "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரை
யொடு கழைவிளை நெல்லே'''' (சிலப். 5. 23. அடி. மேற்) இவை தனித்தனியே பகுத்துத்
தொகுக்கப்பட்டிருப்பது தோன்ற, ''''பால்வேறாகக் குவைஇய'''' என்றார். இருந்தேத்தல்
முதலியவற்றைச் செய்யும் மாகதர் மூவரையும், ''''சூதர் மாகதர் வேதா ளிகரொடு''''
(சிலப். 5 48.) என்று பிறரும் கூறப. போக வேட்கை மிக்குவரும் ஆடவர்க்கு அதனை
நல்கி, அவர் வரம்பிகவாமைக காத்தலின், ''''போகம் புரக்கும் பொதுவர்'''' எனப்
பொதுமகளிரைக் கூறினார். நோக்கு நுழைய மாட்டாத கைவினையும் நுண்ணூலும் பல்வகை,
வண்ணமுமுடைய உடையென்பதாம்; ''''நோக்கு நுழைகல்லா நுண்மைய'''' (பொருந. 82.)
என்று பிறரும் கூறுப. வளம், ஈண்டுப் பொன்னின்மேற்று,
|