நகர்க்குச் சென்ற செய்தியைத் தெரிவித்து நீயும் ஆண்டுச் செல்க வென்றற்கு
"தாயரும் அப்பதிப் படர்ந்தன" ரென்றான். இனிக் கச்சி மாநகரின் நிலைமையைக்
கூறுகின்றான்.
155--62. அணியிழை
அன்னதை அன்றியும் கேளாய்-புனையிழாய் அதனை அல்லாமலும் இன்னுமொன்று கேள்,
பொன்னெயில் காஞ்சிநாடு கவின் அழிந்துமன்னுயிர் மடிய மழைவளம் கரத்திலின்-
பொன் மதிலையுடைய கச்சி நகரம் அழகு கெடப் பலவுயிர்களும் இறக்குமாறு மழைவளம்
இல்லதொழிந்தமையால், அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்
நகர் எய்தினர் காணாய் - அப் பதியில் இருந்த அறவோருக்கு அன்னமிடுவோர்
இல்லாமையினால் இப் பதியை அடைந்திருக்கின்றவர்களைக் காண்பாயாக, ஆருயிர்
மருந்தே அந் நாட்டு அகவையில் காரெனத் தோன்றி காத்தல் நின்கடன் என அருந்தவன்
அருள - ஆகலின் அரிய வுயிரை அளிக்கும் மருந்து போல்வாய்! நீ அந் நகரத்தின்கண்
மழைதரும் முகிலெனத் தோன்றி அவ் வுயிர்களைக் காப்பாற்றுதல் நினக்குக் கடமையாம்
என்று மாசாத்துவான் கூற;
அழிந்து: செயவெனச்சத்திரிபு. மடிய: செயவெனெச்சம் காரியப்
பொருட்டு. அந்நகர் மாதவர்க் கென்றான், மாதவர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளிரேயாயினும், பௌத்த சமயப் பேரறமுணர்ந்த பெரியோர்
இருக்கும் சிறப்புப்பற்றி, ஆண்டிருந்து வந்திருந்தோரை, "அந்நகர் மாதவர்"
என்றான். அவர்கள் ஈண்டு வந்திருத்தற்குக் காரணத்தை "ஐயமிடுவோர் இன்மையின்"
என்பதனால் குறித்தான். ஆருயிர் மருந்தாகிய உணவுதரும் அமுதசுரபியை யுடைமைபற்றி,
மணிமேகலையை, ''ஆருயிர் மருந்தே'''' என்றான். வரையாது வழங்கவேண்டுமென்ற குறிப்பால்,
"காரெனத் தோன்றி" என்றும், செய்யாமை குற்றமென்பது தோன்ற, "காத்தல் நின்
கடன்" என்றும் குறிப்பாய்ச் சொன்னான் என்பது.
162--76. ஆயிழை வணங்கி - அழகிய இழையணிந்த மணிமேகலை
மாசாத்துவானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, திருந்தியபாத்திரம் செங்கையின்
ஏந்தி-தெய்வத்தன்மை பொருந்திய அமுதசுரபியைத் தன் சிவந்த கைகளில் ஏந்தி,
கொடிமதில் மூதூர்க்குடக்கண் நின்று ஓங்கி-கொடிகளையுடைய மதில் சூழ்ந்த பழமையாகிய
வஞ்சிநகரத்தின் மேற்றியசையினின்றும் எழுந்து, வடதிசை மருங்கின் வானத்து
இயங்கி - வடதிசைப் பக்கமாக விசும்பிற் சென்று, தேவர்கோமான் காவல்மாநகர்
மண்மிசை கிடந்தென வளந்தலை மயங்கிய - தேவர்கட்கரசனான இந்திரன் அரசு புரியும்
அமராவதியே வந்து நிலவுலகில் இருந்ததுபோல வளஞ்சிறந் திருந்த, பொன்னகர்
வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒண்டொடி நங்கை - அழகிய நகரமான
கச்சிமாநகரம்,
|