| துன்பமாகிய பயனை நல்குவது. அடிகளும், "ஊழ்வினை யுருத்துவந்தூட்டு" மென்பது காண்க.
நல்வினைப் பயன் முன்னரும்தீவினைப் பயன் பின்னரும் துய்க்கப்படுமென்பது சான்றோர்
முடிபாதலின், "தேவரிற் றோற்றி" யென்றும், "இன்னும் துய்த்து" என்றும் கூறினான்.
"மேற் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம், அவ் வினை யிறுதியின் அடுசினப் பாவம், எவ்வகை யானு மெய்துத லொழியாது" (26:35-7.) எனக் கண்ணகி கூறுதல்
காண்க. இது சமண சமயத்துக்கும் உடன்பாடாதலை "நல்வினை கழிதலும் நலியுந் தீவினை,
செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது" (சூளா. கல். 231.) என்பதனாலறிக.
"ஆங்கத் தீவினையின்னும் துய்த்து" என்பதனால் கோவலன் முன்னைத் தீவினைப்
பயன் முற்றும் நுகர்ந்து கழித்தற்குள்ளாகவே கொலையுண்டானென்றும், அதனைத் தேவப்
பிறப்புக்குப் பின்பு நுகர்வனென்றும் அறிக. கோவலனாயிருந்த காலத்து நல்வினையே
புரிந்தானென்ப: "இம்மைச் செய்தன யான்றி நல்வினை" (சிலப்.15:61) என்பதனாலறிக.
எதிர்கால நிகழ்ச்சியை விளங்க முற்கூட்டிக் கூறலின் "அற்புதக்கிளவி" யென்றும்,
அது பொய்யா தென்றற்கு, "அறிந்தோர் கூற" என்றும் கூறினான்.
146--54. தோகை-மயில்
போல்வாய்; யானும் அந்நாள் அறநெறி கேட்குவன் நானும் புத்தன் போதியின்கீழ்
உரைத்தருளும் அறநெறிகளை அப்போது உடனிருந்து கேட்பேன்; நின்னது தன்மை அந்
நெடுநிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ-உன்னுடைய
பின்னிகழ்ச்சிகளைக் கந்திற்பாவை மொழியால் தெளிந்தனை யல்லவோ, அறவணன்
சாற்றக் கேட்டனன் - அறவண முனிவர் கூற அதனை நான் கேள்வியுற்றேன், ஆங்கவன்
தானும் நின் அறத்திற்கு ஏதுப் பூங்கொடி கச்சிமா நகராதலின் - பூங்கொடிபோல்வாய்
நின் அறததிற்குரிய ஏதுநிகழ்ச்சி கச்சி நகரத்தின்கண் உண்டாமாகலான் அறவணவடிகள்
ஆண்டுச் சென்றனர், அம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப்
பதிப் படர்ந்தனர் - அம் மாதவர் காஞ்சி நகரத்திற்குச் சென்ற நாளில் நின்
அன்னையரும் ஆண்டுச் சென்றனர்;
அறநெறி
கேட்குவன்" என்பது மாசாத்துவாற்கு எதிர்காலத்தில் நிகழ்வது கூறியது. மணிமேகலைக்கு
எதிர்காலத்து நிகழவிருப்பதனை "நின்னது தன்மை" என்றும், அது கந்திற்பாவை
வருவதுரைத்த காதைக்கண், "துவதிக னுரைக்கும் சொல்லலுஞ் சொல்லுவேன்" என்று
தொடங்கிக் கூறுவனவற்றால் விரியக் கூறப்படுதலின், "துவதிகனுரையிற் றுணிந்தனை"
யென்றும் கூறினான். மணிமேகலைக்குப் புத்தவறம் கேட்டற்குரிய ஏதுநிகழ்ச்சி
கச்சிமாநகர்க்கண் எய்துமென அறவணவடிகளால் தனக்கு முன்பே கூறப்பட்டிருப்பதாக
மாசாத்துவான் கூறுவது மணிமேகலையைக் கச்சிமாநகர்க்குச் செல்லப் பணிக்கும்
குறிப்பிற்று. அதனையே மேலும்வற்புறுத்தற்கு, அவன் கச்சி
|