பக்கம் எண் :

பக்கம் எண் :467

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

துன்பம் நீங்கும் பொருட்டு அமைந்தது, கண்டு தொழுது ஏத்தும் காதலின் - யான் அதனைக் கண்டு வணங்கித் துதிக்கும் விருப்பத்தாலாகும்; வந்து - இவண் வந்து, இத் தண்டாக் காட்சித் தவத்தோர் காவிரிப்பட்டினம் கடல்கொளும் என்ற - நீங்காத நல்லறிவினையுடைய இப் பெருந் தேவர்கள் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோட்படும் எனச் சொல்லி யருளிய; அத் தூவுரை கேட்டுத் துணிந்து இவண்இருந்தது - அந் நன்மொழிகளைக் கேட்டு அங்குப் போதலாகாதெனத் துணிந்தமையால் இவ்விடத்தே யிருப்பேனாயினேன் எ - று.

"திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்" (102) என்றவன் அதற்குக் காரணம் கோவலன் இயற்றிய சயித்தியம் இயன்றது கண்டு தொழுதேத்தும் காதலினால், தூவுரைகேட்டுத் துணிந்தமையால் இவணிருந்தது என்றான் என இயைத்துக்கொள்க. கோவலனோடு அக்குலம் தொடர்பற்றுப் போதலின் "நின் பெருந் தாதை" யென்றான். முன்னோனாகிய கோவலன் வேந்தனொடு கூடியிருந்து அறங்கேட்டற்குக் கரணம் கூறுவான், "மன்னவன் தனக்கு நீங்காக் காதற்பாங்க னாதலின்" என்றும், மலைமேற் கட்டிய சீகோவில் என்றற்கு, "வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம்" என்றும், அதனைத் தான் வழிபட விரும்பியதற்குக் காரணம் இதுவென்பான், "ஈனோர்க் கெல்லா மிடர் கெட வியன்றது" என்றும் கூறினான். துணிந்து: காரணப்பொருட்டு.

137--46.  நன்னெறி மாதே இன்னுங் கேளாய் - தவநெறியில் ஒழுகும் மணிமேகலையே இன்னும் யான் கூறுவதைக் கேட்பாயாக; தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்-தீவினைவந்து தன் பயனை நல்குதலாலே கொலையுண்டிறந்த நின் தந்தையும், முற்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி - முன்செய்த தவப் பேற்றால் உம்பருலக வாழ்வினை எய்தி, ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்து - பழவினையின் பயனை நுகர்ந்து, பூங்கொடி முன்னவன் போதியில் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி-இளங்கொடியே, புத்தர் அரசமரத்தின்கீழ் அருள றத்தைமேற்கொண்டிருக்குங்கால் தானும் தவம் பூண்டு; காதலி தன்னொடு கபிலையம்பதியில் நாதன் நல்லறம் கேட்டு வீடெய்தும் என்று - மனைவி கண்ணகியுடன் கபிலைப் பதியில் புத்தன் அறவுரைகளைக் கேட்டு நிருவாண மடைவான் என்று, அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-தெய்வக் கிளவிகளை உணர்ந்தோர் கூற, சொற்பயன் உணர்ந்தேன் - அச்சொற்களின் பயனை நான் அறிந்தேன்.

"நன்னெறி மாதே" யென்றான், கோவலன் இறந்தற்குக் காரணம் அவனது முன்னைவினை என்பதை யுணர்ந்திருப்பதுபற்றி. வினை உருத்தல்-பிறவுருவுடைப் பொருள் வாயிலாக வினையானது தன் பயனையூட்டுதல். பொற்கொல்லன் வேந்தன் முதலாயினார் வாயிலாகக் கொலைத்