பக்கம் எண் :

பக்கம் எண் :466

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

திருவடிகளை விளக்கி அவர்க்கு ஏற்ற தன்மையினால் அறுசுவையினையும் உடைய நான்குவகைப்பட்ட உணவுகளையும் அளித்து, வேத்தவையாரொடும் பலபலசிறப்பொடு ஏத்தினன் இறைஞ்சலின் -அரசவை யுறுப்பினரோடு கூடிப் பற்பல சிறப்புக்களைச் செய்து துதித்து வணங்கினா னாகலின், பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும்-பிறப்பினால்வரும் இன்னலும் பிறவாமையினாற் பெறும் இன்பமும், அறத்தகை முதல்வன் அருளிய வாய்மைஇன்ப ஆரமுது - அற முதல்வனாகிய புத்தன் அருளிச் செய்த நால்வகை வாய்மையுப் ஆகிய இன்பம் பயக்கும் கிடைத்தற்கரிய அமிழ்து போலும் அறவுரைகளை; துன்பம் நீங்க - பிறவித் துன்பம் நீங்குமாறு, இறைவன் செவி முதல் சொரியும் அந்நாள் - மன்னவன் செவிகளிடமாக உரைத்த அந்நாளில்;

"தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்: 262) என்பதுபற்றி, "முற்றவம் உடைமையின்" என்றார். இனிப்பு, புளிப்பு முதலாகச்சுவை ஆறும், தின்னல் பருகல் முதலாக உணவுவகை நான்கும் கொள்க. சாரணர்க்குரிய வழிபாட்டினைத் தனித்த முறையினும் பல்வகைப் சிறப்புக்களை வேத்தவையாருடனும் வேந்தன் ஆற்றினான், அஃது அரசுமுறை யாதலின். பிறப்பிற் றுன்பம்-பிறப்பினானாகுந் துன்பம்; "பிறந்தோருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்" (மணி. 2: 54) என முன்னரும் கூறினர். அறத்தை அமிழ்தென்றராகலின், அதற்கேற்ப, "செவி முதல் சொரிந்து" என்றும், அதனால் விளையும் பயனை, "துன்பம் நீங்க" என்றும் கூறினார். தவமுடைமையின், காவலன் ஏத்தி, விளக்கி, அளித்து, இறைஞ்சலின், அச் சாரணர் வாய்மை யின்பவாரமுது செவி முதற் சொரியு மந்நாள் என இயையும்.

123--36.  நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் - நின் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பதுதலைமுறை முன்னோனாகிய கோவலன் என்பான், மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆகலின்-குடக்கோச் சேரலாதனுக்கு எப்பொழுதும் பிரியாத அன்புடை நண்பனாதலின், தாங்கா நல்லறம் தானும் கேட்டு - தரும சாரணருரைத்த நல்லறத்தினை அரசனுடனிருந்து தானும் கேட்டு, முன்னோர் முறைமையிற் படைத்ததை அன்றித் தன்னால் இயன்ற தனம் பல கோடி-தன் முன்னோர்கள் நல்வழியினாலே படைத்த பெரும் பொருளோடே தன்னால் ஈட்டப்பட்ட அளவிறந்த நிதிகளையும், எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து-ஏழு நாட்களுள் இரப்போர்க் களித்து; தொழுதவம் புரிந்தோன்-யாவரும் வணங்கும் தவம் புரிந்தணன்; சுகதற்கு இயற்றிய வானோங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் - புத்த தேவனுக்கு வானளாவிய மலையின்கண் அமைத்த வெள்ளிய ஒளியினையுடைய கோயில், ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது - இவ் வுலகின் கணுள்ளோர்கட்கெல்லாம்