|
குறித்த செய்தியைத் திருவண்ணாமலைக் கல்வெட்டுக் கூறுகிறது. குடக்கோச் சேரலாதன்
சேரன் செங்குட்டுவற்கு ஒன்பது தலைமுறை மூத்தவனாதலின், இவனை அச்செங்குட்டுவன்
தந்தையான இமயவரம்பனாகக் கோடல் பொருந்தாது ; "நின் பெருந் தாதைக்கு
ஒன்பது வழிமுறை, முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு, நீங்காக் காதற் பாங்கன்"
(மணி. 28: 123-5) என்று இவ்வாசிரியர் கூறுதல் காண்க. கோவலன் மதுரையிற்
கொலையுண்டிறந்த காலத்து சேர நாட்டு வேந்தன் செங்குட்டுவனென வுணர்க. இப்பொழில்
என்றது, மாசாத்துவான் இருந்து தவம் புரிந்த சோலை. ஆங்கு: அசைநிலை; ஒரிடத்தைச்
சுட்டி ஆங்கென்றானென்றுமாம்.
107--13. இலங்கா
தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத்
தீவின்கணுள்ள சம்னொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய,
தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் -
தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும் கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின்
வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள்
அரசனுக்கு நல்வினையாகிய காரணம் பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால்,
இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய பொழிலின் கண்ணே இளங்கி, கற்றலத்து
இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது;
புத்த
தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால்
தருமவுரை குறித்துநாடுகட்கு விடுக்கபட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது.
ஈண்டுக் கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக்
ககனத் தியங்குவோரென்றற்குக் கருமுகிற்கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற்செல்பவரென்றுமாம்.
புரை யோர் - உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும்
சாரணர் இப் பொழிற்கண் இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி
நிகழ்தலின்" என்றார். அவர்கள் இருந்து அறங்கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல்
மரபு; இதனைச் சிலா தலம் என்றலும் வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந்
தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163)
என்று அடிகள் கூறுவது ஒப்புநோக்கத்தக்கது.
114--22. "முற்றவம்
உடைமையின் காவலன் விரும்பி முனிகளை ஏத்தி - முற்பிறப்பிற் செய்த நற்றவமுடையோனாகலின்
அரசன் அச் சாரணரை விருப்பத்துடன் கண்டு துதித்து, பங்கயச் சேவடி விளக்கிப்
பான்மையின் அங்கவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ் தம் பாத்திரத்து அளித்து
- அவருடைய தாமரை மலர்போலும்
|