பக்கம் எண் :

பக்கம் எண் :570

Manimegalai-Book Content

 

30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

அறுவகைத்தாம்-அறுவகைப்படும்; நல்வினை தீவினை என்று இருவகையால் - நற்செய்கையும் தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்-மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை யடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி - அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோற்றி; வினைப்பயன் விளையுங்காலை-செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில் ; மனப் பேரின்பமும் - மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் ; கவலையும் - துன்பத்தையும் : காட்டும் - காட்டுவதும் செய்யும் எ - று.

உலகம் பாவம் புண்ணியம் என இருவகைப்படுமென்றும், புண்ணிய வுலகம் தேவவுலகம் உருவப்பிரமவுலகம் அருவப்பிரமவுலகமென மூவகையாக நிலவுமென்றும், இவை பொதுவில் முப்பத்தொன்றா மென்றும் கூறுப வாயினும், வினை செய்தற் குரியது நடுவுலக மெனவும், நல்வினைப் பயன் நுகர்தற் குரியது மேலுலக மெனவும், தீவினைப் பயனை நுகர்தற்குரியது கீழுலக மெனவுர் முக்கூறுபடுவதுபற்றி, "உலக மூன்றினும்" என்றார். இது தமிழகத்து வழக்குப்போலும். பண்டைத் தமிழ்ப் புத்தநூல்கள் உலக மூன்றென்றே கொண்டுள்ளன வென்பதை, "இவ் வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருணீங்க, எவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்த செழுஞ்சுடர்" (வீர. யாப். 11. மேற்.) என வரும் பழம் பாட்டாலு மறியலாம். நரகர், பேய், விலங்கு முதலியவற்றிற்குரிய வுலகினும் கீழுலகத்தவ ராயினும், அசுரருமகப்பட உயர் திணையாற் கூறப்படும் இயைபு பற்றி, மக்கள் முதலாயினரொடு கூட்டி "மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்" என்றார். புள் முதலிய பிற வுயிர்களிமடங்க, "தொக்க விலங்கு" என்றார். பெரும்பான்மையான நூல்கள் பிரமரைத் தேவருள் அடக்கி, மக்களும் தேவரும் நரகரும் விலங்கும் பேயுமென உயிர்வகை யைந்தென்றே கூறுகின்றன. வேறு சில நூல்கள் இவ்வைந்தனோடு அசுரரை கூட்டி உயிர்வகை யாறென்றும் கூறும் இவ்வாசிரியர் அவ்வசுரரை நரகரோடு அடக்கிக் கொள்கின்றாரென வறிக. ஒரு பிறப்பிற் செய்தவினை மறுபிறப்பிற் கருவிலேயே தோன்றித் தன்பயனை நுகர்விக்குங் காலமெய்துங்காறும் அமைந்திருந்து, வந்ததும் தவறாது நுகர்விப்பதுபற்றி, "கருவிற்பட்ட பொழுதினுட்டோற்றி" என்றும், "வினைப்பயன் விளையுங் காலை உயிர் கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்" என்றும் கூறினார். நல்வினைப்பயன் இன்பமும் தீவினைப்பயன் கவலையு மாதலின், இரண்டும் கூறப்பட்டன. சா,தலும் என்றதற்கேற்பக் காட்டும் என்பது காட்டுதல் செய்யும் எனப் பொருளுரைக்கப்பட்டது. இது சொற் பொருள் விரித்தல்.

64--75. ஆய்தொடி நங்காய் - அழகிய வளையணிந்த நங்கையே; தீவினை யென்பது யாதென வினவின்-தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்;