அவர்
வேட்கையை அபிநந்தனை யென்றும், தோற்றத்தைப் பஞ்சஸ்கந்த மென்றும் கூறுதலின்,
அவரோடு அவர் முழுவதும் ஒவ்வாமை யறிந்துகொள்க. சில நூல்கள் அவிச்சையிற்
றொடங்காது, வினைப்பயன் முதலாகத் தொடங்கிய பேதைமை யீறாகக் கூறுகின்றன.
இப் பன்னிரண்டனையும் பகுத்தாராய்ந்தறிதலால் விளையும் பயன் இது வென்பார்,
"பிறந்தோ ரறியின் பெரும்பே றறிகுவ, ரறியா ராயி னாழ் நர கறிகுவர்" என்றார்.
பெரும்பேறு - வீடுபேறு; அதனிற் பெரியது வேறில்லை யாதலின். தசபூமிக சூத்திர
முடையா (சூ; 48) ரும் இவ்வாறே கூறுகின்றார்.
51--4. பேதைமை யென்பது யாதென வினவின் - பேதைமையொனச் சொல்லப்படுவது
யாதென்று கேட்டால்; ஒதிய இவற்றை உணராது-நால்வகையாகக் கூறிய வாய்மைகளையும்
நிதானங்களையும் உணர்ந்து கொள்ளாமல்; மயங்கி - மயக்கமுற்று; இயற்படு பொருளால்
கண்டது மறந்து-காட்சியாலும் கருத்தளவையாலும் அறிந்தவற்றை மறந்து; முயற்கோடு
உண்டெனக் கேட்டு அது தெளிதல் - முயற்குக் கொம்பு உண்டோ இல்லையோ என்பதைப்
பிறரைக் கேட்டு உண்டெனின் உண்டெனத் தெளிவதாம் எ-று.
வாய்மைகளையும் அவற்றை விளக்கும் இயல்புடைய நிதானங்களையும்
"இவற்றை" யெனக் குறித்தார். காட்சி கருத்து என்ற இரு வகையளவையாலும் அறிவும்
பொருள்களை "இயற்படுபொருள்" என்றார் பௌத்தர் காட்சியுங் கருத்துமல்லாத
பிறவளவைகள் தூய்மை யுடையவல்ல வென்ப வாகலின், கேள்விக்குரிய "கேட்டது தெளிதல்"
பேதைமை எனப்படுவதாயிற்று. இனி, தம்மசங்கணி யென்னும் நூல் பேதைமையாவது
நால்வகை வாய்மைகளையு மறியாமை (1100, 1102), என்று கூறுகிறது. இவ்வாறே, "பேய்மை
யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுனாய்க், காமுற்றா மதன் பயத்தினிற் காமனைக்
கடந்து, நாம ரூஉம்புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும். வாமன் வாய்மையை
மறந்திட்டு மறைந்தொழி கின்றாம்" (வீர. யாப். 5 மேற்) என்று பிறரும் கூறுதல்
காண்க. திக்க நிகாயத்தின் பகுதியாகிய மகா நியாய சுத்தித்திற்
காணப்படும் நிதானங்களுள் இப்பேதைமை காணப்படாமையின், ஒருகால் இது வைதிக
சமய நூல்களிலிருந்து மேற்கொண்ட தாகலா மென்றும், திபேத்திலுள்ள கோயில்களில்
இப்பேதைமையாகிய நிதானம், குருடனாக வுருவு கொடுத்தோவிய மெழுதப்பட்டுள தென்றும்
ஆராய்ச்சியாளர் கூறுப.
55--43. உலகம் மூன்றினும் - மூவகையுலகங்களிலும்; உயிராம். உலகம்
அலகில - உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாம்; பல் உயிர் - பலவாகிய உயிர்கள்;
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் - மக்கள் தேவர் பிரமர் நரகர் என்றும்;
தொக்க விலங்கும்பேயும் என்று-புட்களோடு தொக்கிருக்கம் விலங்கும் பேயும்
என்றும்;
|