|
அந் நோய் என்ற சுட்டு ஆற்றலால் அதன் தோற்றம் குறித்து நின்றது. வினையும்
வினைப்பயனும் வேறு வேறாய்க் காரணமாதல் தோன்ற, "செய்கை" யென்றும், "கரும
வீட்ட" மென்றும் கூறினார். துக்கத்தோற்றம் கூறுமாற்றால் அதன் காரணம்
பேதைமை முதலிய வைந்துமாமென்று கூறி இரண்டாவது வாய்மை கூறியவாறு. தொக்கு நின்ற ஏகாரம் பிரிநிலை.
186-8.துன்பம்
தோற்றம் பற்று காரணம்-துன்பத்துக்கும் பிறப்புக்கும் பற்றுடைமையே காரணமாம்;
இன்பம் வீடு பற்றிலி காரணம் - இன்பத்துக்கும் பிறவாத வீடுபேற்றிற்கும் பற்றின்மையே
காரணமாம்; ஒன்றிய உரை - ஒருங்கே தொகுத்துரைக்கும் இவ்வுரையே; வாய்மை நான்காவது
- நால்வகை வாய்மையாவது எ - று.
துன்பம்
தோற்றம் பற்றே காரணம் என்றது, மூன்றாவதாகக் கூறப்படும் துக்க நீக்கம்.
இன்பம் வீடு பற்றிலி காரணம் என்றது. நான்காவதாகக் கூறப்படும் துக்க நீக்க
நெறி. துக்கம் துக்கத் தோற்றம் துக்க நீக்கம் துக்க நீக்க நெறியென்னும்
இவற்றைத் துக்கம் சமுசயம் நிரோதம் மார்க்கம் என்று கூறி, ஒவ்வொன்றும்
தன்மஞான க்ஷாந்தி, தன்மஞானம், அந்வய ஞான க்ஷாந்தி, அந்வய ஞானமென நந் நான்கு
வகைப்பட்டுப் பதினாறாக விரிதலின், இவற்றைச் சுருங்க வுரைப்பதை, "ஒன்றிய
வுரை"யென்றார். முன்பும், "பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே
ரின்பம், பற்றின் வருவது முன்னது பின்னது, அற்றோ ருறுவது" (2: 64-7) என வேறு
வகையாற் கூறியிருத்தல் காண்க.
189-90.உருவு - உருவமும்; நுகர்ச்சி - வேதனையும்; குறிப்பு - குறிப்பும்; பாவனை - பாவனையும்;
உள்ள அறிவு - விஞ்ஞானமும் என்ற; இவை ஐங்கந்தமாவன - இவைகள் ஐவகைக் கந்தங்களெனப்படும்
எ - று.
ஈண்டுக்
கூறிய உருவு முதலைந்தையும் "ஓங்குருவம் வேதனையுளக்குறிப்புப் பாவனைமெய், தாங்குணர்வென்
றைந்தாங்கந் தம்" என்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. வட
நூல்கள் இவ் வைந்தனுள் நுகர்ச்சியை வேதனை யென்றும், குறிப்பினைச் சஞ்ஞை
யென்றும், பாவனையைச் சம்ஸ்காரமென்றும் கூறுகின்றன. இவற்றுள் உருவமாவது உடல்;
அது பூதம் உபாதாய மென்னும் இரண்டினாலுண்டாம்; வேதனையாவது துன்பமும் இன்பமும்
இரண்டும் விரவுவது மென மூன்றாகும்; குறிப்பாவது ஐம்பொறியும் மனமுமாம்; பாவனையாவது
மெய் வாய் மனம் என்ற மூன்றாலு முண்டாகும் அறமும் பாவமுமாம்; விஞ்ஞானமாவது
இந்நான்கினோடும் பொருந்தி யெண்ணும் எண்ணமாம் என்று பரமத திமிரபரனு
உடையார் கூறுகின்றார். இவ் வைந்துங் கூடிய கூட்டமே அருவுருவெனப்படும் உயிருமுடம்புமெனககொள்க.
|