|
தொடர்ச்சி மிகுத்துரை
மூன்றும் உண்மை வழக்கு இன்மை வழக்கு என்ற இரண்டி னோடுறழ ஆறாதலைக் காட்டி,
"தொகை தொடர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய், உற்றிடும் வழக் கிரண்டு மொன்றுமூன்றாகி
யாறாம்" (சிவ. சித். பரபக் 69) என்பதனாலும் துணியப்படும். படவே, இயைந்துரை
யொழித்து ஏனைமூன்றுமே கொண்ட பௌத்த நூல்களும் உண்டென்பது எய்துகிறது.
205-7. இயைந்துரை என்பது-இயைந்துரை
என்று சொல்லப்படுவது; எழுத்துப் பல கூடச் சொல்லெனத் தோற்றும் - எழுத்துக்கள்
பல கூடிய வழிச் சொல்லென்பது தோற்றுமாறு போலன்றி; பல நாள் கூடிய எல்லையை
- பல நாட்கள் கூடிய ஒரு கால வெல்லையை; திங்கள் என்று வழங்குதல் - திங்களென்று
வழங்குவது போல்வது எ - று.
எழுத்துக்களின் கூட்டத்தால் உண்டாகும் சொல்
தொகைத் திறமாதலின், அதனை விலக்கி, இத்துணையென வரையறுக்கப்பட்டவற்றின்
கூட்டம் "இயைந்துரை"யென்றார். அன்றி யென்பது அவாய் நிலை. முப்பதும் முப்பத்தொன்றும்
முப்பத்திரண்டும் இருபத்தொன்பதுமாய்த் திங்களின் நாளெல்லை வேறுபடுதலின்,
"பல நாள் கூடிய எல்லை" என்றார். ஆனித்திங்கள் முப்பத்திரண்டு நாட்களும்
சித்திரை முதலியன முப்பத்தொரு நாட்களும் ஐப்பசி முதலியன முப்பது நாட்களும்
கார்த்திகை இருபத்தொன்பது நாட்களும் கொண்டிருத்தல் காண்க. வரையறைப்படாத
பல பொருள்தொகுதி தொகை யெனவும், வரையறைப்பட்ட பல பொருள் தொகுதி இயைந்துரையெனவும்
வழங்குப.
208-16. உள்வழக்குஉணர்வு-உள்வழக் கென்பது உள்ளதாகிய உணர்ச்சியை யுளதென்றல்; இல்வழக்கு முயற்கோடு
- இல்வழக்காவது இல்லாததாகிய முயற்கோட்டினை இல்லை யென்றல்; உள்ளது சார்ந்த
வுள் வழக்கு - உள்ளது சார்ந்துவரும் உள் வழக்காவது; சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சியாகும்
- உள்ளதாகிய உணர்வோடு அதற்கியைந்த நுகர்ச்சியு முண்டென்பதாம்; மின்போல்
- மின்னுப்போல; சித்தம் உற்பவிதத்து என்கை - உணர்வாகிய உள்பொருள் தோன்றிற்றென
இல்வழக்குக் கூறுதல்; உள்ளது சார்ந்த இல்வழக்காகும் - உள்ளதைச் சார்ந்து
வரும் இல்வழக்கெனப்படும்; காரணம் இன்றிக் காரியம் நேர்தல்-காரணமில்லையாகக்
காரியத்தைத் கொண்டுரைத்தல்; இல்லதுசார்ந்த உள்வழக்காகும் - இல்லாததைச்
சார்ந்து வரும் உள்வழக்காகும்; முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல்லெனல்
- முயற்கோடு இல் பொருளாதலின் அதற்குத் தோற்றமில்லை யென்று கூறுதல்; இல்லது
சார்ந்த இல்வழக்காகும்-இல்லாததைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும் எ
- று.
|