என்றும் முன்பும் கூறியிருத்தல் காண்க. அஞ்ஞானத்தை இருளென்ப வாதலின், அவ்
வியைபே பற்றிச் சான்றோர் ஞானத்தை ஒளியாகக் கூறும் சிறப்புத் தோன்ற,
"ஞானதீபம்" என்றும், அதனை ஐயந்திரிபறக் காண்பிக்கும் சிறப்பினை, "நன்கனம்
காட்ட" என்றும் கூறினார். தானம், சீலம் எனப் பத்து வகையான பாரமிதைகளை,
தவத்திறமென்றார் எண்வகைப்படுதலின். அறநெறியை, "தருமம்" என்று பொதுப்படக்
குறித்தார். அவை, நற்காட்சி, நல்லொழுக்கம், நல் வாய்மை, நல்வாழ்க்கை,
நற்செய்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்செய்கை என்பனவென்று பரமத
திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. அறுகு : செய்கென்னும் வாய்பாட்டுத் தன்மை
வினைமுற்று.
தானந் தாங்கிச் சீலம் தலைநின்று உணர்ந்தோன்.
வணங்கிச் சென்றடைந்தபின், மொழிவோன், வாமன் ஏமக் கட்டுரை, ஈரறு பொருளின்
ஈந்த நெறியுடைத்தாய், தோன்றி மீட்டும் தொடர்தலின் மண்டில வகையா யறியக்
காட்டி, கண்ட நான்குடைத்தாய், சந்திவகை மூன்றுடைத்தாய், தோற்றம் மூன்று
வகையாய், காலமூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, ஆறு வழக்கு முகமெய்தி, நயங்கணான்
காற்பயன்களெய்தி, நால்வகை வினாவிடை யுடைத்தாய், எல்லாந் தானேயாகிய பேதைமை
முதலிய பன்னிரண்டும் அறியிற் பெரும் பேற்றிகுவர் ; அறியார் நரகறிகுவர் ;
பேதமை முதலியன இவை ; மண்டில வகை இவை; கண்டம் இவை; நயங்கள் இவை; வினாவிடை
யிவை; கட்டும் வீடும் காரணம் தருதற்குரியோரில்லை ; காமம் வெகுளி மயக்கம்
காரணம்; பற்றறுத்திடுதல், செற்ற மற்றிடுக, மயக்கங் கடிக, மனத்திருள் நீங்குக
என்று காட்ட, தவத்திறம் பூண்டு, பாவை, தருமம் கேட்டு, அறுகென நோற்றனள் என,
வினை முடிபு கொள்க.
மணிமேகலை 27 ஆம் காதை முதல்
ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியவுரை முடிந்தது.
|