பக்கம் எண் :

பக்கம் எண் :35

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 

கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. ததர்-கொத்துமாம்; 1 "சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்" என்பம் காண்க. வெண்பலி-வெண்ணீறு; சாம்பல். வெண்பலியாகிய சாந்தமெனக் கொண்டு வல்லொற்று விகாரத்தாற் றொக்க தெனினுமாம். சுழலலும் சுழலும்-சுழலுதலையும் செய்யும்; பின்வருவனவற்றிற்கும் இங்ஙனம் பொருள் கொள்க; 2 "இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதூஉம் அது. அழூஉம் முதலியவற்றை வினையெச்சப்படுத்து, நிற்கின்ற என ஒரு சொல் விரித்து முடிக்க; இனி, மையலுற்ற மகன் என்பதனை எழுவாயாக்கி, அழூஉம் முதலிய வினைகளோடு தனித்தனி முடித்து, அவன் என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம்.

116--125. சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும்
    இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள
    வாள்நகை-பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க
    ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய
    அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-
    வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப்
    புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த
    புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை
    போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர்
    போலுஞ் சிவந்த கையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய
    அழகிய இளங்கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண்
    மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும்,
    இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும்,
    எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட
    பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-
    வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில்
    நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த
    நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக்
    கோலத்துப் பேடு காண்குநரும்- பேடிக் கோலத்தையுடைய
    பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்:

சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலியவற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவதனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும்.

------------------------------------------------------------------------------
1
சிறுபாண். 254-5. 2 சிலப். 22-154.
------------------------------------------------------------------------------