பக்கம் எண் :

1

இரண்டாவது

சபா பருவம்

     ஸபா பர்வம் என்ற வடமொழித்தொடர், திரிந்தது;  சபையினது
சம்பந்தமான பருவமென்று, ஆறாம்வேற்றுமைத்தொகையாகக் கொள்க;
சபையின் விஷயமான பருவமென்பது கருத்து.  இனி, இரண்டாம்
வேற்றுமையுருபும் பயனுமுடன் தொக்க தொகையாக சபையைப் பற்றிய
பருவமெனினும் அமையும்.  காண்டவ வனத்திலே எரியிற்படாது உய்ந்த
மயனென்பவனாற் பாண்டவர்க்காக இந்திரப்பிரத்த நகரத்தி லமைக்கப்பட்ட
சபா மண்டபத்திலும் அத்தினாபுரத்தில் துரியோதனாதியர் சிற்பிகளைக்
கொண்டு இயற்றிய சபாமண்டபத்திலும் நிகழ்ந்த செயல்களைக் கூறும்
பாகமென்று பொருள்;  அவற்றில் முறையே நிகழ்ந்த செயல்கள்
பாண்டவர்களது இராயசூய யாகமும், தருமபுத்திரனுடன் சகுனி சூது
பொருதலும்.  ஆனதுபற்றி, இப்பருவம் - இராயசூயச் சருக்கமும், சூதுபோர்ச்
சருக்கமுமாக இரண்டு உட்பிரிவை யுடையது.  அவற்றுள்,

முதலாவது

இராயசூயச் சருக்கம்

     பாண்டு மகாராஜா பித்ருலோகத்திலிருந்து நாரத மகரிஷி மூலமாகச்
சொல்லி யனுப்பியபடி தருமபுத்திரன் இராயசூய யாகத்தைச் செய்து முடித்த
செய்தியைக் கூறுகின்ற பாகமென்பது பொருள்.  ராஜஸூயமென்ற
வடமொழிப்பெயர்,  இராயசூயமென விகாரப்பட்டது;  ராஜசூயமென்ற யாகப்
பெயரின் காரணம்:- அரசனால் சோமலதையைப் பிழிந்து
செய்யப்படுவதென்றும், ராஜா என்னும் பெயருள்ள சோமலதை நொருக்கப்
படுவதென்றும் காண்க.  இது - எல்லா அரசர்களையும் வென்று அவர்களிடங்
கொண்ட பொருளைச் செலவிட்டுச் செய்வதொரு பெருவேள்வி.  இராயசூயச்
சருக்கமென்ற தொடர் - இரண்டனுருபும் பயனுந் தொக்க தொகை.
இராயசூயத்தினது சம்பந்தமான சருக்கமென்று விரித்தால், ஆறாம்வேற்றுமைத்
தொகையாம்.

     கதைத் தொடர்ச்சி:- சந்திரகுலத்திலே விசித்திரவீரியனுக்கு மக்களாகத்
திருதராட்டிரனும் பாண்டுவும் பிறந்தனர்.  திருதராட்டிரனுக்கு மக்கள்,
துரியோதனாதியர் முதலிய நூற்றுவரும், துச்சளை யென்பவளும்.  பாண்டுவுக்கு
மக்கள், தருமபுத்திரன் முதலிய ஐவர்.  (பாண்டுவின் மனைவியான குந்திக்குக்
கன்னிகையாயிருக்கும்போது பிறந்தவன் - கர்ணன்.)