(இ - ள்.) நஞ்சம் - விஷத்தையுடைய,நாகம் - பாம்பை யெழுதின கொடியை, உயர்த்த - உயர நிறுத்தின, மீளி - வலிமையிற் சிறந்த துரியோதனன், தன் நகர் புகுந்த உழி - (துவாரகையினின்று) தனது அத்தினாபுரியைச் சேர்ந்தபொழுது, நண்பு அற கஞ்ச மாமனை வென்றவன் செயல் - உறவுமுறை சிறிதும் பாராட்டாமல் கம்சனாகிய தனது மாமனை அழித்திட்டவனான ஸ்ரீகிருஷ்ணனது செய்தியை [இருவர்க்கும் ஒவ்வொருவகையில் உதவிசெய்ய உடன்பட்டதை], கண் இலானொடு உரைத்த பின் - பிறவிக்குருடனான திருதராட்டிரனோடு சொன்னவுடனே - (அத்தந்தை) - வஞ்சம் மைந்தரோடு மீளவும் உயவி - வஞ்சனைக் குணத்தையுடைய தன்மக்கள் நூற்றுவருடனே மறுபடியும் ஆலோசித்து, மண் கொடாத குறிப்பினன் - (அவ்வாலோசனையிலும்) இராச்சியபாகத்தை (ப் பாண்டவர்களுக்கு)க் கொடுத்தலில்லாத கருத்தையே தேர்ந்தவனாய், (பின்பு) சஞ்சயன்தனை வருக என்று - சஞ்சயமுனிவனை வருவாயாக வென்று (வரவழைத்து உபசரித்து), இரு தாள் பணிந்து - (அவனது) உபயபாதத்தை வணங்கி, இவைசாற்றுவான் - இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.) - அவற்றை மேல் இரண்டு கவிகளிற் காண்க. நாகம் - (கால்களால்) நடவாததென்றும்,மலைகளில் அல்லது (சந்தன) மரங்களில் வாசஞ்செய்வ தென்றும் காரணப் பொருள் கூறப்படும்; நகம் - நடத்தலில்லாதது; மலையும், மரமுமாம். கண்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்த முறையாகுபவனாதலால், கஞ்சன் கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல்லப் பிறந்த தேவகிபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய விருத்தாந்தங்களை ஆதியோடந்தமாக நாரதர் சொல்லக்கேட்டு, கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம் வைத்து அவனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழி தேடுகையில், சபையில் கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின்மேலேறி அவனது கிரீடங் கழன்று கீழே விழும்படி அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தனனென்பது கதை. மகாவஞ்சகனாகிய கஞ்சனையும் வென்ற மாயவனது உதவி பாண்டவர்க்கு இருத்தலால், அவர்களை இந்த வஞ்சமைந்தரால் வெல்லலாகாதென்பது தோன்ற 'கஞ்சமாமனை வென்றவன்' என்றார். (43) இதுவும் மேற்கவியும் - ஒரு தொடர்: திருதராட்டிரன் சிலகூறிச் சஞ்சயமுனிவனைப் பாண்டவரிடம் தூதனுப்புதல். 3. | குருகுலத்தரசர்க்குறுந்தொழில்கூறுநற்குருவாதலால் இருகுலத்தினுமுற்பவித்தவரென்றுநின்சொன்மறுத்திடார் பெருகுலைக்கனலன்னபிள்ளைகள்பேசுகின்றபிணக்கறுத் தொருகுலத்தவருததிசூழ்புவியாளுமாறினியுட்கொளாய். |
|