பக்கம் எண் :

சஞ்சயன் தூது சருக்கம் 59

அவர்பாடி வீடு உற மன்னினான் - அப்பாண்டவர்களதுபடைவீடாகிய
உபப்பிலாவியத்தை அடைதலைப் பொருந்தினான் [அடைந்தா னென்றபடி];
                                                       (எ- று.)

     குளிர்ந்தநிழலையும் நீரையும் வேண்டிய சுவையினிய
காய்கனிகிழங்குகளைத் தரவல்ல விருக்கவருக்கத்தையுமுடைய நல்லதொரு
காட்டின் அகத்தில் இனிமையாக வசித்துக் காலங்கழிப்பாராயின் அதுவும்
கண்ணிலாவரசன் கருத்துக்கு ஒவ்வாதாதலால், அவர்கள் கண்டவிடங்களிலும்
அலைந்து வருந்தவேண்டு மென்பான், 'அகலடவியின் புறத்திருந்து' என்றான்
போலும்.  தசிந்தை யொப்பன - தனது கவலைக்கு ஏற்றவை யென்றுமாம்.
'தனசிந்தையொப்பன' எனவே, இவன் சொன்னவார்த்தைகள் உலகத்தா ரெவர்
கருத்துக்கும் ஒப்பனவல்லவென்பது அருத்தாபத்தியால் விளங்கும்.  இவற்றை
மறுக்காததற்குக் காரணம் முனிவனது பெருந்தன்மையேயாதல்வேண்டு
மென்பது தோன்ற 'பெருமுனி' என்றா ரென்க.  முனிக்குப் பெருமையென்ற
அடைமொழி கொடுத்ததனால், திருதராட்டிரனுக்குப் பெருந்தன்மை யில்லை
யென்பது தொனிக்கும்.  தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த
தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்;
'அறம்' என்ற பெயருக்குங் காரணம் இதுவே.  'தேவர்களை இருதிணையாலுஞ்
சொல்லலாம்' என்ற நியாயம் பற்றி, 'அறம்' எனக் கூற்றுவன அஃறிணையாகக்
கூறப்பட்டான்.  செறுத்திடும் என்பதற்கு - (நல்லோர் யாவராலும் மிக்க
பொறாமையை யுடையவனென்று) வெறுக்கப்படுகிற என்றும் உரைக்கலாம்.
'எண்பது கோடி நினைந் தெண்ணுவன' என்றபடி திருதராட்டிரன் நினைக்கும்
எண்ணங்கள் மிகப்பலவாதலால், சிந்தை இங்கே பன்மையாயிற்று.  மற்றவர்
என எடுத்து, எதிர்திறத்தவரான பாண்டவரென்றலுமாம்.  பாடிவீடு - பாசறை;
பகைமேற்செல்பவர் உறையுமிடம்.  பரிவுரைத்தல் - இதோபதேசம்.  பாடிவீடு
உற மன்னினான் - பாடிவீட்டின் சமீபமாகச் சேர்ந்தனனென்க.         (45)

சஞ்சயன் பாண்டவரிடம் சென்று பேசத்தொடங்குதல்.

5.

சென்றவம்முனிசெலவறிந்தெதிர்சென்றுதத்தமசென்னிதாள்
ஒன்றவைத்துவணங்கியாசியுரைக்குமெய்ப்பயனுற்றபின்
மன்றலந்துளவோனுநல்லறன்மைந்தனுந்திறலனுசருந்
துன்றுபொற்றவிசினிலிருத்தவிருந்துசில்லுரைசொல்லுவான்.

     (இ - ள்.) மன்றல் அம் துளவோனும் -பரிமளத்தையுடைய அழகிய
திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானும், நல் அறன் மைந்தனும் -
நற்குண நற்செய்கைகளையுடைய தருமபுத்திரனும், திறல் அனுசரும் -
வலிமையையுடைய (அவனது) தம்பிமாரான (வீமன் முதலிய) நால்வரும், சென்ற
அ முனி செலவு அறிந்து - (அத்தினாபுரியினின்று புறப்பட்டு) வந்த அந்த
சஞ்சயமுனிவனது வருகையை உணர்ந்து, எதிர்சென்று - எதிர்கொண்டுபோய்,
தத்தம் சென்னிதாள் ஒன்ற வைத்து வணங்கி - தங்கள் தலையை
(அம்முனிவனது) திருவடிகளிலே பொருந்த வைத்து நமஸ்கரித்து, ஆசி
உரைக்கும்