எளிதாய் உச்சரிக்க வொண்ணாத செயற்கை யொலிகளாலாகி
முயற்சி வருத்தத்தை யுண்டுபண்ணுவதால் அது குற்றமாகவுமுள்ளது. இனி இனிமையோ பல வகைப்படும். மா,
பலா, வாழை முதலிய பல கனிகளின் சுவையும் இனிமையே யாயினும் ஒவ்வொன்றன் இனிமையும் வெவ்வேறு
வகைப்படும். அதுபோல மொழிகளின் இனிமையும் வெவ்வேறு வகைப்படும். இலத்தீன் இனிமை வேறு; இந்தியினிமை
வேறு; தமிழினிமை வேறு. தமிழினிமையைத் திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம். மாணிக்கவாசகர்
வரலாறுங் காலமும் முதலிய நூல்களிற் கண்டுகொள்க. ஆண்டும் செவிப்புலன் நுணுகியார்க்கே சிறந்து
புலனாம். தமிழின்பம் இயற்கையும் இந்தியின்பம் செயற்கையுமாகும்.
இந்திப் பயிற்சியைப் பரப்புவார் ஆங்காங்கு எளிய கட்டணப்
பாடசாலைகளை ஏற்படுத்தித் தற்கல்விக் கேற்ற பல இந்தி நூல்களையும் உரையுடன் பல மொழிகளில்
வெளியிட்டு எளிய விலைக்கு விற்று வருகின்றனர். இந்தியப் பற்றுள்ள தேசியத் தலைவர்களும் சுயராஜ்யம்
விரைந்து வருமென்றும், வந்தவுடன் இந்தியே தேச மொழியென்றும், அதற்கு முன்னரே தாங்கள் இனிப்
பேசுவதெல்லாம் இந்தியே யென்றும், இந்தியறியாதார் தங்கள் சொற்பொழிவுகளைக் கேட்டுணர முடியாதென்றும்
ஆங்காங்கு நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைகின்றனர். இதனை நம்பிப் பலர் இந்தி பயில்கின்றனர்.
வடமொழி யிறந்துபட்டதே என்று வயிறெரிகின்ற வடமொழி வெறியார்க்கு வடமொழிக் கிளையான இந்திப்
பயிற்சி கோடை மழைபோலக் குளிர்ச்சி தருகின்றது. இந்தி வாயிலாய் வடமொழியை உயிர்ப்பித்து
மீட்டும் வளர்க்கலாமென்று அவர் பகற் கனாக்காண்கின்றனர்.
இந்திப் பயிற்சியால் தேசிய ஒற்றுமை உண்டாகுமென்று சில
தேசியத் தொண்டர் ஏமாற்றுகின்றனர்; சிலர் ஏமாறுகின்றனர். தேசிய ஒற்றுமை கருதி இந்தி பயில்வது
அவலை நினைத்து உரலை இடிப்பதாகின்றது. இந்து தேசத்திலுள்ள பிரிவினை குலமத வேறுபாட்டானும் பிறப்புப்பற்றிக்
கற்பிக்கும் ஏற்றிழிபானு மன்றித் தேசப் பொதுமொழியின்மையானன்று. இந்திப் பயிற்சி ஒருவேளை
இன்றுள்ள பிரிவினையைப் பெருக்குமே யன்றிக் குறைக்கா தென்பது ஒருதலை.
இனி, இந்தியால் தமிழ் வளர்ச்சியுறும் என்று ஏமாற்றுவாரும்
உளர். ஒரு கிளைமொழி அல்லது சார்பு மொழியாயின் பிற மொழிச் சார்பால் வளரும். ஒரு தனித்
தாய்மொழியோ பிற மொழிச் சார்பால் தூய்மையிழக்கும். ஆங்கிலம் ஒரு சார்பு மொழியாயும்
உலகப் பொது மொழியாயு மிருத்தலின், அது பல மொழிகளினுங் கடன் கொள்வது இன்றியமையாததாகின்றது.
ஆங்கிலத்தின் பெருமைக்குக் காரணம் ஆங்கிலரின் ஆட்சி, வாணிகம், புது நிருமாண வன்மை முதலியவையேயன்றி
அயன்மொழியிற் கடன்கோட லன்று. தமிழ், தெலுங்கு முதலிய இந்திய மொழிகள் கடன் கொள்வதினால்
ஆங்கிலம் பெருமையடைய முடியுமா? இக் காலத்தில் ஒரு வகுப்பார் விஞ்ஞானக்கலைத் தேர்ச்சியும்
புது நிருமாண வன்மையும் பெற்றாலொழிய அவர் மொழி எங்ஙனம் பெருமை பெறக் கூடும்? புது நிருமாண
வன்மையிற் சிறந்த பல வகுப்பார் மொழிகளுள்ளும்
|