ஆங்கிலம் தலைசிறந்து விளங்குகின்றதே! தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகள் வெறுமையாய் வழங்குவதற்கே
பிறமொழித் துணையை வேண்டுகின்றன. சில மொழிகள் மொழியளவாய்த் தமித்து வழங்கினும் கலை
வளர்ச்சிக்குப் பிறமொழித் துணை வேண்டுவவாகின்றன. தமிழோ எதற்கும் பிற மொழித்துணை
வேண்டாதவாறு அத்துணைச் சொல்வள முடைத்தா யுள்ளது. ஆயினும், ஆங்கிலத்திற்குரிய பெருமை
அதற்கில்லையே! இதுவரையில்லாத பெருமையா இனிக் கடன் கோடலால் தமிழுக்கு வந்துவிடும்? இக்கால
உயர்தரக் கல்வியெல்லாம் விஞ்ஞானக் கலையாக வன்றோ வடிவு கொண்டுள்ளது? விஞ்ஞானக் கலைகளை
யெல்லாம் மொழிபெயர்த்துக் கொள்வமெனின், எந்த மொழியில்தான் (பிறமொழித் துணை கொண்டேனும்)
அவற்றை மொழிபெயர்க்க முடியாது? மொழிபெயர்த்த வளவானே எம் மொழிக்கும் ஏற்றம் வந்து விடுமா?
ஆகையால், தமிழ் பெருமை பெறாததற்குக் காரணம் அதில் விஞ்ஞானக் கலை முதனூ லின்மையே யன்றி
அதன் கடன் கொள்ளாமை யன்று.
பாடசாலைகளிலுங் கல்லூரிகளிலும் மாணவர் பாடங்களுள் அயன்மொழி
ஆங்கிலம் ஒன்றேயா யிருக்கும்போதே தமிழ்ப்பயிற்சி மிகக் குன்றியுளது. இனி இந்தியும் ஒரு
பாடமாயின் தமிழ்ப்பயிற்சி மிகமிகக் குன்றும் என்பதற்கு ஐயமின்று. மேலும், தமிழைத் தாய்
மொழியாகக் கொண்டுள்ள வடமொழிப் பற்றினரெல்லாம் இந்தியைத் தாய்மொழியெனக் கூறுவர்.
ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் இறந்துபட்ட வடமொழியே இன்றும் தம் தாய்மொழியெனக் கூசாது கூறுபவர்,
இதுபோது வழக்கிலுள்ள இந்தியைக் கூறாது விடுவரா? விடாரன்றே! ஆகையால், இப்போதுள்ள பிரிவினை
இன்னும் வைரங் கொள்ளுமன்றோ?
இனி, இந்தி அயலார் முக்கியமாய்த் தமிழர் எளிதிற் பயிலுமாறு
அத்துணை இலக்கண நேர்மையுடையதுமன்று. அதன் மயக்குகளிற் சிலவாவன:
1. பால்கள் தமிழிற்போற் பொருள்பற்றி யில்லாமல் வடமொழியிற்போல்
ஈறுபற்றியே யிருக்கும். பெரும்பாலும் அ, ஆ ஈற்ற ஆண் பாலென்றும், இ, ஈ ஈற்ற பெண்பாலென்றுங்
கூறப்படும். ஆயினும், ஹவா(காற்று), தவா (மருந்து), ஜுகாம்(சளி), இச்சா(விருப்பம்), துனியா
(உலகம்), ஜாய்தாத் (சொத்து), தக்லிப் (கஷ்டம்), மௌத்( மரணம்), சபா (சபை), தாவத்
(விருந்து), பாத் (வார்த்தை), தவியதா (தேகஸ்திதி), கபர் (சமாச்சாரம்), பூஞ்ச் (வால்),
ஆங்க் (கண்) முதலிய எத்துணையோ சொற்கள் அ, ஆ ஈற்றவேனும் பெண்பாலே. இ, ஈ ஈற்ற ஆண்பாற்
சொற்கள் சிலவே.
இந்தியிற் சிலவிடத்துச் சொற்களி னீற்றிலுள்ள அகரம்
ஒலிப்பதில்லை. ஆண்டு ஒலிபற்றி மெய்யீறாயினும் எழுத்துப்பற்றி உயிரீறாகவே கொள்ளப்படும்.
ஆங்கிலத்தில் உச்சரிப் பொழுங்கின்மைபோல் இந்தியிற் பாலொழுங்கின்மையால் பல சொற்கட்குத்
தனித்தனி பாலறிய வேண்டுவதாகின்றது.
|