பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 15
15

வேரைக் குறிக்குமிடத்து, "ஒருகால் பின்வரும் சொற்கட்கு மூலங்காட்டும் பொருட்டுப் ''பல்'' என்னும் வேரையொட்டிப் படைக்கப்பட்டது!" ("invented after ''pal'', prob. to explain the following words") என்று மானியர் உவில்லியம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது, பின்வருஞ் சொற்கள் என்று குறிக்கப் பெற்றவை பல்ல, பல்லக்க, பல்லி, பல்லிக்கா, பல்லீ என்பன, பல் (pal) என்னும் வேர்க்குக் குறிக்கப்பட்ட பொருளும், போதல் (to go) என்பதே.

பல்ல = பெருங்களஞ்சியம், நெற்கூடு.

பல்லக்க = தக்காணத்தில் ஒரு மாவட்டப் பெயரின் பிற்பகுதி.

பல்லிக்கா = சிற்றூர், சிறு வீட்டுப்பல்லி.

பள்ளி என்னும் சொல், பள் என்னும் வேரினின்று திரிந்து பல பொருள்களைக் கொண்டிருப்பினும், சிறப்பாகப் படுக்கையை யுணர்த்து மென்பது, பள்ளிகொள்ளுதல், பள்ளிகொண்டான், பள்ளிகொண்ட பெருமாள், பள்ளியெழுச்சி, பள்ளிமாடம், பள்ளிமண்டபம், பள்ளியந்துலா, பள்ளியம் பலம் முதலிய சொற்களால் அறியப்படும், படுக்கை என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளி என்னுஞ் சொல் முறையே வீடு, கோயில், பள்ளிக்கூடம் முதலிய பொருள்களை உணர்த்தும். இங்ஙனமிருப்பவும், இச் சொல்லை வடமொழியில் அதன் எழுத்து முறைக் கேற்பப் பல்லி என்றும் பல்லீ என்றுத் திரித்துக்கொண்டு போதல் அல்லது இயங்குதல் என்னும் பொருந்தாப் பொருளை அதன் வேர்ப்பொருளாக பொருத்திக் காட்டுவது மட்டுமன்றி, பல்லி என்னும் ஊருயிரிப் பெயரையும் பள்ளி என்னுஞ் சொல்லொடு மயக்கி, அதனையும் வடசொல்லென ஏமாற்றுவது. அறிவாராய்ச்சி மிக்க இவ் இருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணையும் ஏற்குமோ? கண்டு தெளிக கடுகளவேனுங் கருத்துடையார்.

 
 - திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம், மணிவிழா மலர், 1958