பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 16

3


 வண்ணனை மொழிநூல்

இன்று தனிக் கலையாக வழங்கியும் வளர்ந்தும்வரும் மொழிநூல் 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் முளைத் தெழுந்ததேனும், அதற்கு வித்துத் தமிழ்நாட்டில் கி. மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இடப் பட்டதென்பது,

 
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே
(தொல். 640)

 
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா
(தொல். 877)

 
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
(தொல். 880)

 
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். 884)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் உணரலாகும்.

மேனாடுகளில் கடந்த முந் நூற்றாண்டுகளாக வளர்க்கப்பெற்று வரும் மொழிநூல், தொடக்கத்தில் ஆங்கிலத்தில், (Science of speech, Science of Language, Linguistic Science , Linguistics, Glottology, Philology) எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் (Linguistics, Philology) என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன.

மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு தழுவியதாகவும் ஒப்பு நோக்கியதாகவும் பல கூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசு முல்லர் (Max Muller) , விற்றினி (Whitney) , செசுப்பெர்சென் (Jespersen) முதலிய மொழி நூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர். ஆயின், அண்மையில், சில மேலை மொழிநூலறிஞர், சிறப்பாக அமெரிக்கர், மொழிநூலை,

 

1. வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics)
 2. வரலாற்று மொழிநூல் (Historical Linguistics)
 3. ஒப்பியல் மொழிநூல் (Comparative Linguistics)

என முக்கூறாகப் பகுத்து, அவற்றுள் வண்ணனை மொழிநூலையே சிறப்பாக வளர்த்து வருகின்றனர். இதன் பல குறைகள் உண்மைக்கு மாறாகவும் தமிழுக்குக் கேடாகவும் உள்ளன. அவையாவன: