பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 24
24

தொட்டு நெடுங்காலமாக வழங்கி அடிப்பட்ட வழக்குகளைக் கூறும் மரபியலிற் கூறப்பட்டிருப்பதாலும், தமிழரின் ஆறுயிர்ப் பாகுபாடு எண்ணுக்கு மெட்டாத தொன்மைத் தென்றறியலாம்.

இனி, ஓரறிவுயிரையும் மனிதரையும் இவ் விருவகையாகப் பகுத்தது மிக வியக்கத்தக்கதாகும்.

"புல்லு மரனும் ஒரறி வினவே" என்னும்போதே ஓரறிவுயிர் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது. இதனால், புல்லுக்கும் மரத்துக்கும் இடையில் உள்ள பூண்டு, புதர், செடி, கொடி முதலியவும் புல்லின் வகையாயடங்கும் என்பது புலனாகும். ஆனால், மூங்கிலானது உறுப்பால் புல்லாயும் உயரத்தால் மரமாயுமிருப்பதால், அது எவ்வகையுள் அடங்கும் என்னும் ஐயத்தை நீக்குவதற்கு

 
புறக்கா ழனவே புல்லென மொழிப
(தொல்.626)

 
அகக்கா ழனவே மரமென மொழிப
(தொல். 627)

என்றனர்.

இவற்றுள், "மொழிப" என்று கூறியிருப்பதால் இவை முன்னோர் கூற்றென்றறிதல் வேண்டும். புறக்காழ் வெளிவயிரமுள்ளது, அகக்காழ் உள்வயிரமுள்ளது. ஆகவே, மூங்கில் புல்லின் வகையென்பது பெறப்படும்.

ஓரறிவுயிர் போன்றே மாந்தரையும் மக்கள் மாக்கள் என இருவகையாகப் பிரித்தனர். மனித வடிவுகொண்ட மாத்திரத்திலேயே ஒருவன் மனிதனாகமாட்டானென்றும் பிறவுயிர்களினின்று அவனைப் பிரித்துக் காட்டக்கூடிய அறிவும் ஒழுக்கமும் அடைந்தபோதே அவன் மனிதனாவனென்றும் தமிழ் முன்னோர் கண்டுங்கொண்டு மிருந்தனர். அதனால், அறிவொழுக்க முள்ளவரை மக்களென்றும் அவையில்லாதவரை மாக்கள் (விலங்குகள்) என்றும் கூறினர். இதை.

 
மாவு மாக்களும் ஐயறி வினவே
(தொல். 1531)

 
மக்கள் தாமே ஆறறி வுயிரே
(தொல். 1532)

என்னும் தொல்காப்பிய நூற்பாக்களாலும்,

 
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்
(குறள். 420)

 
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தி
ல்
(குறள். 1071)

 
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
(குறள். 410)

என்னும் குறட்பாக்களாலும் அறியலாகும். மக்களுக்கு நூலறிவில்லாவிட்டாலும் ஒழுக்கத்திற்குக் காரணமான பகுத்தறிவிருந்தாற் போதுமென்பது