பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 25
25

முன்னோர் கருத்து. ஆகவே, மக்களுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது. மக்கள் என்னும் பெயருக்கு மகன் என்பதும் மாக்கள் என்னும் பெயருக்கு மா என்பதும் ஒருமையாகும். மகன் மகள் என்னும் ஒருமைப் பெயரும் மக்கள் என்னும் பன்மைப் பெயரும், மனிதப் பொருளும் முறைமைப் பொருளும் ஒருங்கு கொண்டிருத்தலின், அவற்றால் மயக்க முண்டாகாமைப் பொருட்டு, மனிதப் பொருளையே தருதற்கு மாந்தன் என்னும் பெயர் பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. மாந்தனுக்குப் பலர்பால் மாந்தர்; பெண்பால் மாந்தையாகத் தோன்றுகிறது.

 
மாந்தர் மக்கள் என்னும் பெயரும்.....
அப்பதினைந்தும் அவற்றோரன்ன
(தொல். 647)

என்று மாந்தர் என்னும் பெயரை உயர்திணையாகத் தொல்காப்பியத்திற் கூறியிருத்தல் காண்க.

(4) இருதிணை - உயர்திணை, அஃறிணை.

தமிழிலக்கணத்தில், பொருள்களெல்லாம் உயர்திணை அஃறிணை என இருதிணையாக வகுக்கப்பட்டுள்ளன. இது தமிழரின் சிறந்த அறிவையும் நாகரிகத்தையும் காட்டுவதாகும். திணை = குலம்.

பகுத்தறிவுள்ள அல்லது ஒழுக்கமுள்ள மேன்மக்கள் உயர்திணையாகவும், அவரல்லாத கீழ்மக்களும் உயிருள்ளனவும் உயிரில்லனவுமாகிய பிறபொருள்களும் அஃறிணையாகவும் கூறப்பட்டனர். ஒருவனுக்குப் பகுத்தறிவிருந்தும் ஒழுக்கமில்லாவிடின் அவன் உயர்திணையாகான். ஆகையால், பகுத்தறிவென்பது எப்போதும் ஒழுக்கத்தையும் தன்னுடன் உளப்படுத்தும்.

அல் + திணை = அஃறிணை, உயர்வல்லாத திணை அஃறிணை யெனப்பட்டது.

 
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே
(தொல். சொல். 1)

என்பது தொல்காப்பியம்.

இதில் மக்கள் என்னும் வகுப்பாரையே உயர்திணையாகக் கூறியுள்ளது.

ஆனால், பிற்காலத்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவணந்தியார்,

 
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(தொல். சொல். 1)

என, உயர்திணையுடன் தேவர் நரகரையும் சேர்த்ததுமன்றி, தொல்காப்பியர் விலக்கிய கீழ்மக்களையும் உயர்திணையாகக் கூறிவிட்டார்.

உலகில் தோன்றிய மக்களே, இம்மையிற் செய்த நல்வினை மிகுதியால் மறுமையில் தேவராய்ப் பிறப்பரென்பதும், தேவருலகில் வீடுபேற்று