பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 73
73

வடமொழி தென்மொழியினின்று கடன் கொண்டுள்ள சொற்கள் ஆயிரக்கணக்கின வாதலால், அவை வடமொழியிலுள்ள அளவானே அவற்றை ஆரியம் என மயங்கல்கூடாதென்றும் அறிதல் வேண்டும். சிலர் ஓரளவு வடமொழி கற்ற அளவானே தம்மை வடமொழி வல்லாரென்று பறை சாற்றிக்கொண்டு எள்ளளவும் ஆராய்ச்சியின்றி வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல் எனத் தாம் மயங்குவதோடமையாது மாணவரையும் ஆசிரியரையும் அதிகாரிகளையும் மயக்கிவருகின்றனர். கல்வி வேறு; ஆராய்ச்சி வேறு. சென்னையும் பெங்களூரும் போன்ற பன்மொழி வட்டாரங்களில் சில கூலிக்காரரும் பன்மொழி பேசுகின்றனர். அவரெல்லாம் மொழிநூலறிஞரோ!

தமிழைச் செவ்வையாய் அறிதற்கு தமிழர் தெற்கினின்று வடக்குப் போந்தார் என்னும் வரலாற்றுண்மையறிவு இன்றியமையாத அடிப்படையாகும். இஃதில்லார் தமிழின் தொன்னிலை அறிதல் தென்மலை காணப் பொன்மலை செல்வதே யொக்கும்.

இதுகாறுங் கூறியவற்றால் ''உவமை'' தென் சொல்லே யென்றும் அது உவ என்னும் முதனிலையடிப் பிறந்த தொழிற்பெயரென்றும் அதன் அடிவேர் உகரச் சொல் என்றும் அதன்கண்ணும் ஒத்தற் கருத்து கொண்டுள்ளதென்றும் அதனால் அது அதனின்று மோனை அள்ளை பின்னைத் திரிபாகத் தோன்றியுள்ள ஒத்தற் கருத்துச் சொற்களையெல்லாம் தாங்கிநிற்கும் தனிப்பெரும் தூண் என்றும் அணிகட்கெல்லாந் தாயான உவமையிலக்கணத்தையே அணியிலக்கணமாகவுங் கூறும் தொல்காப்பிய உவம இயல் வடமொழியில் பிற்காலத்து விரிவாகத் தோன்றிய அணிநூல்கட் கெல்லாம் மூலமென்றும் வரலாற்று அடிப்படையிலே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சியின்றிக் குறடும் பேதையும் போலக் கொண்டது விடாமை ஆசிரியர்க் கழகன்றென்றும் அறிந்துகொள்க. தொல்காப்பிய இலக்கணத்தின் தொன்மையும் முன்மையும் தூய்மையும் தாய்மையும் ஆகிய எல்லா செய்திகளும் என் "தொல்காப்பியக் கட்டுரைகள்" என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.

உவமை தென் சொல்லே என்பதற்கு வேறு சில சான்றுகளுமுள.

தமிழில் "உவமை" என்னும் சொல்லில் "உவ" என்பது வினைப் பகுதி; ''மை'' என்பது விகுதி; ஆகவே, ''உவ'' என்பதே உயிர்நாடியான உறுப்பு.

''மை'' விகுதி. வந்தமை. வருகின்றமை, என்பன போன்ற சொற்களில் தொழிற்பெயர் விகுதியாகவும், சிறுமை, பொறுமை என்பன போன்ற சொற்களில் தொழிற் பண்புப்பெயர் விகுதியாகவும், நன்மை, தீமை என்பன போன்ற சொற்களில் பண்புப்பெயர் விகுதியாகவும் இருக்கும்.

வடமொழியில் ''உபமா'' என்னும் சொல்லில் ''உப'' என்பது இடைச்சொல்லான முன்னொட்டு (உபசர்க்கம். Prefix) என்றும் ''மா'' என்பது அளவு