பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 75
75

வியாகரணங்கள் எல்லாம் நன்னூல்போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும் தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள்யாவும் எழுத்துச் சொற் பொருள் மூன்றையுங் கூறும் பிண்டங்கள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். வடமொழியில், யாப்பிலக்கணம் சந்தசு அல்லது சந்தோபிசிதி என்னும் நூல்களிலும், அணியிலக்கணம் அலங்காரம் என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ, யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள். அவை தனிநூற்களிற் கூறப்பட்டவிடத்தும், பொருள் இலக்கணக் கூறுகளாகவே என்றுங் கொள்ளப்பெறும். உவமை அணிகட்கெல்லாம் தாயாதலால், அணியிலக்கணம் உவமவியலில் அடக்கமாம்.

தொல்காப்பிய உவமவியலில் நால்வகை ஏனையுவமங்களுடன் ஐவகை உள்ளுறை உவமங்களும் கூறப்பெற்றுள்ளன; உவமை உறுப்புகள் மாணவர்க்கு எளிதாய் விளங்குவன வாதலால் கூறப்பெறவில்லை. ஆயின், எச்சவியலில் உவமத்தொகை கூறப்பட்டிருப்பதால் அதன் மறுதலையாகிய உவம விரியும் கூறாமல் கூறப்பட்டதாகக் கொள்ளப் பெறும்.

உவமம், உவமவுருபு, பொதுத்தன்மை, பொருள் என்னும் நான்கும் உவமை உறுப்புகளாம். இந் நான்கும் அமைவது விரியுவமை; உவம உருபு அல்லது உவமவுருபும் பொதுத்தன்மையும் குறைவது தொகையுவமை. வடமொழியில் இந் நான்கையும் முறையே, உபமான, உபம வாசக, சாதாரண தர்ம, உபமேய என்றும்; விரியுவமத்தைப் பூர்ணோபமா என்றும்; தொகை யுவமத்தை ''லுப்தோபமா'' என்றும் அழைப்பர். இவையெல்லாம் பிற்காலத்து வளர்ச்சியும் மொழி பெயர்ப்புமாகும்.

இதுகாறும் கூறியவற்றால் ''உவமை'' தென்சொல்லே என்றும் உவமவியல் தென்மொழி யிலக்கணக் கூறே என்றும் தேர்ந்து தெளிக. தாழ்வுணர்ச்சி நீங்குக! தலை நிமிர்க!