பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 76
13

திரவிடம் தென்சொல்லின் திரிபே

திரவிடம் அல்லது திராவிடம் என்னும் சொல் எம் மொழியது என்பது இன்றும் பலர்க்குத் தெரியாதிருப்பதானும், அண்மையில் அதுபற்றி ஓர் ஐயவினா தென்றலில் தோன்றியதானும் அம் மயக்கை அறவே அறுத்தற்கு எழுந்ததிக் கட்டுரை.

நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்து ''அம்'' ஈறு பெற்றே வழங்கின என்பது,

  அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம்
சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்
மகதம் கோசலம் மராடம் கொங்கணம்
துளுவம் சாவகம் சீனம் காம்போசம்
பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை

என்னும் திவாகர நூற்பாவும்,

  சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே

என்னும் பழஞ் செய்யுளும் உணர்த்தும். இம் முறைபற்றித் தமிழும் தமிழம் என வழங்கிற்று. இதனாலேயே, ஈறுகெட்ட மகர வீற்றுப் புணர்ச்சியாக, தமிழப் பிள்ளை, தமிழநாகன், தமிழவளவன் முதலிய புணர்மொழிகளும் தோன்றின. நன்னூலார் இவற்றைத் தமிழ் என்னும் நிலைமொழி அகரச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்றும், தொல்காப்பியர் அம் மொழி அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்றும், கூறினர். இவர் கூற்றின்படி, கொங்கவண்ணான் என்பதைக் கொங்கு என்னும் நிலைமொழி அகர அல்லது அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததாகவும், துளுவ வேளாளன் என்பதைத் துளு என்னும் நிலைமொழி அவ்வாறு புணர்ந்ததாகவும், கொள்ளவேண்டி வருமாதலின், அது பொருந்தாதென விடுக்க.

தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே. ழகரம் வட மொழியிலின்மையாலும், உயிர்மெய்ம் முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச்செருகல் அம் மொழிக் கியல்பாதலானும்,