என்று கூறப்பட்டுள்ளது. இதில் ''வள்ளுவன்'' என்பதற்கு எதுகையாயும், சம்பந்தப்பட்ட என்னும் பொருளிலும்
வந்த ''உள்படு'' என்னும் சாமானியத் தொடரை மிகச்சிறந்த பொருளதாகக் கொண்டு ''அரசர்க் குள்படு
கருமம்'' என்பது ஆங்கில நாட்டுச் சேம்பர்லேன் (Chamberlain)
போன்ற ஓர் அதிகாரத்தைக் குறிக்குமென்பர். இது எமக்கு உடன் பாடன்று.
இனிச் சார்பினாலும் வள்ளுவன் தொழில் யாங் கூறியதே என்பது
போதரும், மேற்கூறிய சூத்திரத்தில் ''வள்ளுவன்'' என்பதை அடுத்து நிற்கும் ''சாக்கை'' யெனும் பெயர்,
வெற்றிக் காலத்தும் அமைதிக்காலத்தும் அரசர்க்குக் கூத்தாடி மகிழ்ச்சியை யுண்டுபண்ணும் வேத்தியற்
கூத்தரைக் குறிக்கும். வள்ளுவரும் சாக்கையரும் தமக்குக் கீழ்ப்பட்ட பல துணைவரையும் தத்தம்
தொழிற்கு முழுப்பொறுப்பு முடைமையான் கருமத் தலைவரெனப்பட்டார்.
10ஆம் நூற்றாண்டிலியற்றப்பட்ட சீவகசிந்தாமணியில் வள்ளுவன்
அரசாணையைப் பறையறைந்து விளம்பரஞ் செய்பவனாகக் கூறப் படுதலால், அதற்கு இரண்டொரு நூற்றாண்டிற்கு
முந்திய பிங்கலத்திலும் அதுவேயாதல் வேண்டும்.
பண்டைக்காலத்திற் பாணர்க்கு இசைத்தொழிலே குலத்தொழிலாயினும்,
அவருட் பலர் அதில் பிழைப்பின்மைபற்றிப் பிறதொழிலை மேற்கொண்டது போல், வள்ளுவரும் அரச
வினையில்லாரெல்லாம் கணி (சோதிட)த் தொழில் புரிந்துவந்தனர். சாதகங் கணித்தலும் குறிச்
சொல்லுதலும் இக்காலத்தும் வள்ளுவர்க்குரிய.
பண்டைக்காலத்திலேயே வள்ளுவர் நிமித்திகத் தொழிலுஞ்
செய்துவந்தமையின், வள்ளுவர் எனும் பெயர் நிமித்திகன் எனும் பொருளையுந் தழுவியது. (சிந்தாமணி
419). நிமித்திகன் நிமித்தம் (சகுனம்) கூறுபவன். வள்ளுவன் குறி சொல்லுவதனால், அத் தொழிற்கு
வள்ளுவ சாத்திரமென்றும், அவனுக்கு வள்ளுவப் பண்டாரமென்றும் பெயர் உண்டு. பண்டாரமென்பது முற்காலத்தில்
நூலகங்கட்கும் பல நூல் பயின்ற புலவர்க்கு அல்லது ஞானிகட்கும் வழங்கிய பெயர். அது பின்பு முறையே
துறவு பூண்ட அறிஞர்க்கும் போலித் துறவிகளுக்கும், பெயராயிற்று.
புறநானூற்றிற் சில பாடல்களில் நாஞ்சில் என்னும் மலைக்குத்
தலைவனான ஒருவன் வள்ளுவன் என்னும் பெயராற் கூறப்படுகிறான். அவன் ஒருகாற் சேரனுக்கும், பின்பு
பாண்டியனுக்கும் படைத்தலை வனாயிருந்ததாகத் தெரிகின்றது. அவன் 137, 140, 380ஆம் புறப்பாட்டுகளில்
பொருநன் என்று விளிக்கப்படுகின்றான். பொருநன் என்னும் பெயர் ஏர்க்களம் பாடுவோன், போர்க்களம்
பாடுவோன், பரணி பாடுவோன் என்னும் மூவகைப் புலவருள் அல்லது பாடகருள் ஒருவரையாவது போர்வீரனையாவது
குறிக்கும். இங்குக் கூறப்பட்ட நாஞ்சில் வள்ளுவன் ஓர் படைத்தலைவனாதலின் போர்த் தொழிற்பற்றியே
பொருநன் எனப்பட்டான்.
|