பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 95
17

இந்திப் பயிற்சி

சென்ற சில்லாண்டுகளாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்றும்,தேசியமொழி (அதாவது இந்துதேசப் பொதுமொழி) யாக்க வேண்டுமென்றும் வடநாட்டாரும் தென்னாட்டில் வடமொழிப் பற்றுள்ள ஒரு சாராரும் செய்துவரும் முயற்சி முதலாவது கவனிப்பிற்கிடமின்றி எள்ளி நகையாடப்பட்டதேனும், இதுபோது, தென்றல் முற்றிப் பெருங்காற்றாவது போலும், துரும்பு பெருத்துத் தூணானாற் போலும், சிறு பொறி பெருந்தீயானாற் போலும்மிக்குப் பெருகித் தமிழ் வளர்ச்சி தடைப்படுமாறு அத்துணை இந்திப் பயிற்சியைப் பன்னூ றாண்டுகளாக வேற்றுக் கொள்கைகட் கடிமைப்பட்டுத் தாய்மொழிப்பற்று தினைத்தனையுமில்லாத தமிழ்மக்களிடை பரவியுள்ளது.

ஏனைய நாட்டாரெல்லாம் தத்தம் தாய்மொழியை எத்துணையோ வளம்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டாரோ ''எங்கெழிலென் ஞாயிறெமக்கு'' என்றிருக்கின்றனர். ஆங்கிலத்திற்கும் பிறவற்றிற்கும் ஆயிரக்கணக்கான பொற்காசுகளை வலியக் கொட்டியளக்கும் தமிழரும் உளர். தமிழுக்குப் பெரும் பொருள் வழங்குந் தமிழரோ தமிழுல கனைத்தினும் ஒருவரிருவரே உள்ளனர். இந்து தேசத்தில் வடநாட்டார் மேனாட்டாரும் பிற்படும்படி தாய்மொழிப் பற்றில் தலைசிறந்துள்ளனர். தமிழ்மக்களோ மேலைக் கலைச் சுடர்கள் மிளிர்ந் தொளிரும் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் சுதந்தர வுணர்ச்சியினும் தாய்மொழிப் பற்றினும் செத்து விறைத்துச் சில்லிடத் துயிர்ப்பிக்கும் நிலையுமின்றி ''இராமன் ஆண்டாலென்ன, பரத னாண்டாலென்ன'' என்று கண்மூடித்தனமாய்க் காலங்கழித்து வருகின்றனர்.

இந்திப் பயிற்சியைப் பாடசாலைகளில் வலிந்து புகுத்த விரும்புவார் தம் கொள்கைக்குத் தேசியப் போர்வை போர்ப்பினும், அதற்குக் காரணம் அவர்க்குள்ள ஆங்கிலப் பகையும் வடமொழி வேட்கையுமே என்பது கூர்ந்து நோக்குவார் யார்க்கும் புலனாகாமற் போகாது.

தமிழுணர்ச்சி சிறிதுமில்லாத தமிழ்மக்களிடை இந்திப் பயிற்சியைப் பரப்புவதினால், ஒருகால் தமிழ்க்குக் கேடாகப் பெரும்பான்மை (majority) மட்டும்பற்றி இந்தி கட்டாயப் பயிற்சித் தீர்மானம் ஈடேறவுங் கூடும். இதனால் இந்திப் பயிற்சியே வேண்டாமென்பதில்லை, அதன் கட்டாயப் பயிற்சியே வேண்டாமென்கின்றோம். பயனில் முயற்சியும் தீமை விளைக்கும் தீர்மானமும் வேண்டாமென்பதை அழுக்காறாக் கொள்ளார் அறிவுடையார்.