பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

110

வினை எனப்படுவது பயனிலையாகப் பயன்படுத்தப்படும் பொழுது வேற்றுமை உருபு ஏற்காது; குறிப்பாகவோ அல்லது வெளிப்படையாகவோ காலம் காட்டும்.17 எனவே இரண்டு வகையான பயனிலைகள் அல்லது வினைகள் உள்ளன.

1.

வெளிப்படையாகக் காலம் காட்டும் வினைகள். தொல்
காப்பியரின் கருத்துப்படி இவையே உண்மையில் வினைகள்.
பிற்கால இலக்கண ஆசிரியர்கள் இவற்றைத் ‘தெரிநிலை
வினைகள்’ என வழங்கினர்.

2.

குழல் காரணமாகக் குறிப்பாகக் காலம் உணர்த்துபவை
‘குறிப்பு’ என வழங்கப்பட்டன. ‘குறிப்புவினை’ என்ப
தன் சுருங்கிய வடிவமாக இது இருக்கலாம்.

பயனிலை “தெரிநிலை வினையாக” இல்லாத பொழுது தமிழ் வாக்கியங்கள் வெறும் எழுவாய், பயனிலையுடன் ‘இருக்கிறது’ என்பது போன்று பிறமொழிகளில் வரும் இணைப்புக்கள் ( copula) இன்றி விளங்குகின்றன. ‘இவன் இராமன்’ என்ற வாக்கியத்தில் ‘இருக்கிறான்’ ( is) என்பது இல்லை. சமஸ்கிருதத் தாக்கத்தின் விளைவாகத் தமிழில் புறநிலையில் இல்லாத இது இங்கு உள்ளடக்கமாக அல்லது ஆழ்நிலை இலக்கணத்தில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

2. 0 வினை

2. 1 எச்சம்

வினைமுற்றுக்கள் பயனிலையாக இங்கும் வருகின்றன. இயல்பு வடிவத்தில் வினை எச்சங்கள் வினைமுற்றுக்களுக்கு அடையாக வருகின்றன. சில பெயர்களுக்கு அடையாகவோ பெயர் வேர்ச்சொற்களாகவோ வருகின்றன. இவ்வாறு வருவன பெயரெச்சம் எனப்படும். முன்னரே விளக்கப்பட்டது போலப் பழைய பயனிலைகள் பின்னர் வினையெச்சங்களாக வருவதுண்டு. இவை தொடக்கத்தில் உம்மைத் தொடரமைப்பைத் ( Co-ordinate Construction) தந்திருக்க வேண்டும். இன்றும் கூட இவ்வினையெச்சங்கள் அடுத்து வரும் இடங்களில், அவை ‘உம்மைத் தொடரமைப்புக்களாகவே’ உள்ளன. இவை ஒவ்வொன்றையும் “வினைமுற்று + உம்” என மொழி பெயர்க்கலாம்.


17. தொல்காப்பியம், 638

 

“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்”.