பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

49

ஏனெனில் 4ஆவது வினைவிகற்ப வாய்பாட்டில் இறந்த கால வடிவத்தில் மூக்கொலி வருகிறது. சான்று : ‘அணிந்தான்; நேர்ந்தான்’. ஆரம்பத்தில் இவ்வேர்களின் இறுதியில் மூக்கொலி இருந்திருக்கலாம் என நம்பக் காரணம் இருக்கிறது. பழைய அடிச் சொற்களில் மூக்கொலி முடிவு மறையாது தொடர்ந்து ரகரத்தில் முடிகிற ‘நேர்’ என்னும் வேர்ச்சொல் நான்காம் வினைவிகற்ப வாய்பாட்டினைச் சேர்ந்தது. இங்கு முன்பு குறித்தது போன்ற வல்லொலி இரட்டித்தல் இதற்கு இணையான எந்தவொரு வேர்ச்சொல்லிலும் இல்லை. வந்த போதிலும் ஏவலாக வரும் பொழுது, ஒப்புமையாக்கத்தால் நீட்சி பெற்ற எதிர்கால வடிவத்திலும் மூக்கொலி என்பதுஇழப்புக்குள்ளாயிற்று. முன்னரே குறிப்பிட்டது போலச் சில சமயங்களில் ஆக்க அசையுடனும் சில சமயங்களில் ஆக்க அசை இன்றியும் வரும் வேர்களும் உண்டு.

சான்று : ஆர் > அருந்து; ஆழ் > அழுந்து.

சொல்லாக்க அசையான “து” நீக்கப்பட்டால் வேர் மூக்கொலியுடன் எஞ்சி நிற்கிறது. சில சமயங்களில் பிற சொல்லாக்க அசைகளுக்கு முன்னரும் மூக்கொலியுடன் வரும் பழைய வடிவங்கள் இருப்பதைக் காணலாம். பிற்கால மாற்று வடிவங்களில் (variants) மூக்கொலி மறைந்து விடுகிறது. “இலங்கு” என்பது “இலகு” என்றாகியது. “வா” என்பதற்கு வம், வரு என்பன மாற்று வடிவங்கள். “வம்”, “வந்து” என்பதையும் “வரு”, “வருது” என்பதையும் தருகின்றன.

முன்னரே குறிப்பிட்டது போல யூல் பிளாக் இவற்றிலெல்லாம் ‘உம்’ அல்லது ‘உன்’ என்னும் விகுதியைப் பற்றிப் பேசுவார். இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இதற்கு அவர்தரும் பொருள் இன்னும் நன்கு நிறுவப் பெறாததால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.27

திராவிடமொழி அடிச்சொல்லகராதியில், மூலத்திராவிட மொழிக்கும் தமிழுக்கும் இடையே கொடுக்கப்பட்டுள்ள இன ஒலிகளைப் பின்வரும் பட்டியலில் காணலாம். மூலத்திராவிட மொழி ஞகரத்தையும், ஆடொலி றகரத்தை நுனியண்ண வெடிப்பொலியாகவும் இதில் சேர்த்துள்ளோம்.


27. Jules Bloch:

The Grammatical Structure of Dravidian Languages, p 72.