பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 316 -

செய்யுளில் வடித்துக் கொடுப்போருக்கும், பழைய உணர்ச்சிகளே ஆயினும் புதிய பாட்டு வடிவங்களில் இயற்றுவோருக்குமட்டுமே மக்களின் போற்றுதல் ஓரளவிற்கு கிடைக்கிறது.

ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த புலவர் பலர், பழமையையும் விடாமல் புதுமையிலும் புகுந்து நூல்கள் படைத்தனர். அவர்களுள் சிலரின் படைப்புகளைக் காண்போம். அவர்கள் செய்யுள்நூல்களும் உரைநடை நூல்களும் ஒருங்கே இயற்றியவர்கள்.

சூரியநாராயணர் முதலியவர்கள்

தனித்தமிழ் ஆர்வம் நிரம்பிய புலவர் சூரியநாராயண சாஸ்திரியார் (1870 - 1903) தம் பெயரையும் பரிதிமாற்கலைஞர் என அமைத்து மகிழ்ந்தார். ஞானபோதினி என்ற இதழின் ஆசிரியராகத் (1897 - 98) தொண்டு புரிந்தார். கலாவதி, ரூபாவதி, மானவிஜயம், மதிவாணன் முதலான நாடக நூல்கள் எழுதினார். நாடகக் கலையில் அவர்க்கு ஆர்வம் மிகுதி. நாடகத்துறைக்கு தேர்ந்த வீழ்ச்சியை எண்ணி மிக வருந்தினார். நாடக இலக்கியம் படைக்க முனைந்தோர். அந்தக் கலையின் இலக்கணத்தை ‘நாடகவியல்’ என்ற நூலாக எழுதினார். அவருடைய பாட்டுகள் பழைய இலக்கிய நடை உடையன; ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் நூலும் ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ என்பதும் அக்காலத்தில் பயன்தந்த நூல்கள். வடமொழியிலிருந்து ‘முத்திராராட்சசம்’ என்பதை மொழிபெயர்த்தார். வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றிருந்தும் அவருடைய உள்ளம் தமிழ் இலக்கிய வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டது. அவருடைய தமிழ்நடை கடுமை உடையதாக இருந்தபோதிலும், ஒருவகை உயிரோட்டம் அதில் அமைந்திருந்தது. அருஞ்சொற்கள் பல கலந்த பழைய இலக்கிய நடையாக இருந்தபோதிலும், அவர் உணர்த்திய கருத்துகளில் புதுமை இருந்தது; நன்மை இருந்தது. ஆகையால் அவருடைய நூல்கள் பயன் உள்ளனவாக ஆயின.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862 - 1914), புது வகையான இலக்கிய வளர்ச்சியுள்ள சூழ்நிலையில் வாழ்ந்தபோதிலும், பழைய முறையிலேயே பல நூல்களை இயற்றினார். மாணாக்கர் ஆற்றுப்படை, தென்தில்லை உலா, தென்தில்லைக் கலம்பகம், களப்பாழ்ப் புராணம் என்பவை அவர் இயற்றிய நூல்களுள் அச்சிடப்பட்டவை. ஒரு தல புராணமும், ஓர் ஆற்றுப்படையும், ஒரு கோவையும், மற்றும் சில நூல்களும் அச்சிடப்படாமலே நின்றுவிட்டன. அவருடைய புகழை இந்தச் செய்யுள் நூல்கள் காக்கவில்லை. நற்றிணை என்ற சங்க இலக்கியத்திற்கு அவர் எழுதிய உரையாலேயே அவர் புகழுடன் விளங்குகிறார்.