17.
கட்டுரை முதலியவை
பழமையும்
புதுமையும்
முற்காலத்தில்
தமிழில் மருத்துவம், சோதிடம், அறிவுரை, அறவுரை முதலியவற்றுள் எதையும் செய்யுள் வடிவில்
எழுதி வைக்கும் வழக்கம் இருந்தது. செய்யுள்நூல் எழுத வல்லவர்களே அறிஞர்களாக மதிக்கப்பட்டார்கள்.
நாடகங்களும் செய்யுள் வடிவில் இருந்தன; பலவகைக் கற்பனைகளும் வருணனைகளும் செய்யுள்
வடிவில் அமைந்தன. இந்த மாறுதல் ஏற்பட்ட பிறகு, உரைநடை நூல்கள் பெருகிய பிறகு, பதினேழு
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட செய்யுள் நூல்களைப் படிப்பவரும்
பாராட்டுவோரும் குறைந்து வருகிறார்கள். மிக உயர்ந்த இலக்கியத் தன்மை வாய்ந்த
சிறந்த செய்யுள் நூல்களைமட்டுமே சிலர் படித்துப் போற்றி வருகிறார்கள். மற்றச்
செய்யுள் நூல்களைப் படிப்பவர் இல்லை. அவற்றை இயற்றித் தந்த புலவர்களின் பெயர்களையும்
மறந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, சென்ற நூற்றாண்டில் பற்பல செய்யுள் நூல்களை
இயற்றிப் பெரும்புகழ் பெற்றிருந்த மீனாட்சிசுந்தரம்பிள்ளை இன்று மக்களின் நினைவில்
அவ்வளவாக இல்லை. அவருடைய மாணவராகிய சாமிநாதய்யர் எழுதிய வாழ்க்கை வரலாற்றாலும்
சேக்கிழாரைப்பற்றி அவர் எழுதிய பிள்ளைத்தமிழாலும் அவர் ஓரளவு நினைத்துப் போற்றப்படுகிறார்.
சென்ற நூற்றாண்டில் செய்யுள் நூல்கள் எழுதிய மற்றப் புலவர்களின் பெயர்கள் அந்த
அளவிற்கும் நினைக்கப்படுவதில்லை. சமரச சன்மார்க்கம் என்ற நெறியின் தந்தையாய்
இரக்கமே வடிவாய்ப் பெருஞ்சான்றோராய் விளங்கிய காரணத்தால், இராமலிங்க சுவாமிகளின்
எளிமையான இனிய பாடல்கள் பலராலும் போற்றப்படுகின்றன. புதுநெறியில் எளிமையான சர்வ
சமயக் கீர்த்தனைகளும் நீதிப் பாடல்களும் இயற்றிய காரணத்தாலும், தமிழிலக்கியத்தில்
நாவலுக்குத் தோற்றுவாய் செய்த சிறப்பாலும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை போற்றப்படுகிறார்.
மற்றப் புலவர்கள் எழுதிய செய்யுள்நூல்கள் பல, படிப்பார் இல்லாமல் கிடக்கின்றன.
இன்றும், அவர்களைப் பின்பற்றிப் பழைய மரபும் பழைய பொருளுமாய்ச் செய்யுள் நூல்கள்
எழுதுவோர்க்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. எடுத்துக்காட்டாக, ‘இன்னிசை வெண்பா
இருநூறு’, ‘பஞ்சதந்திர வெண்பா’, ‘ஏகபாத நூற்றந்தாதி’,
‘வள்ளுவர் நேரிசை’ முதலிய செய்யுள் நூல்கள் இயற்றிய பெரும்புலவர் சோழவந்தான்
சண்முகம் பிள்ளையைக் குறிப்பிடலாம். புதிய உணர்ச்சிகளையும் கருத்துகளையும் கற்பனைகளையும்
|