உணர்ச்சிக்
கவிதைத் துறையிலும் எவ்வகையிலும் பின்னடையாமல் வளர்ந்து வந்த தமிழ், இன்று நாவல்
துறையிலும் சிறுகதைத் துறையிலும் வளர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்க சிறப்பே
ஆகும்.
சமுதாயமும்
மனிதனும்
இந்த நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்று வரும் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அமையும் பொருளில்
தெளிவான ஒரு மாறுதலைக் காண்கிறோம். புதிய கவிதைகளிலும் அந்த மாறுதல் உள்ளது எனலாம்.
அது என்ன? பழைய நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட செய்யுள் நூல்களில் பெரும்பாலானவை,
ஒன்று கடவுளைப்பற்றியனவாக இருக்கும்; அல்லது, பொருள் தந்து உதவிய வள்ளலை அல்லது
ஆட்சித் தலைவனைப் புகழ்வனவாக இருக்கும். இன்று வரும் புதிய படைப்புகளில் கடவுளுக்கும்
அவ்வளவு இடம் இல்லை; புரவலன் அல்லது ஆட்சித் தலைவனுக்கும் இல்லை. இன்றைய எழுத்தாளர்களின்
போற்றுதலைப் பெறுபவன் மனிதனே; மனித சமுதாயமே அவர்களின் கற்பனையில் கோயில்
கொண்டிருப்பது. எழுத்தாளர்கள் பலர் கடவுளை வழிபடுகிறார்கள்; ஆயினும் அவர்களின்
பூசையறை வேறு; எழுதுகோல் அந்த வழிபாட்டில் முனைந்து நிற்பதில்லை. எழுத்தாளர் சிலர்
தம்மைப்போன்ற சிலரை ஒரு குழுவாகச் சேர்த்துக்கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களின்
கற்பனையோட்டத்தில் அந்தக் குழுவும் நிற்பதில்லை. அவர்கள் பணத்தை நாடி எழுதுகிறார்கள்;
ஆனால் அவர்களின் உணர்ச்சியலைகளில் அந்தப் பணமும் சிறப்பிடம் பெறுவதில்லை. சமுதாயத்தின்
அல்லது சமுதாய உழைப்பினனாகிய மனிதனின் போராட்டமும் இன்பதுன்பமே அவர்களின் எழுத்துக்கு
உரிய பொருளாக ஓங்கி நிற்கின்றன. இதை இன்றைய நாவல் சிறுகதை நாடகம் கவிதை எல்லாம்
விளக்கி வருகின்றன. எல்லா இலக்கியமும் தெய்வங்களையும் செல்வர்களையும் சுற்றிச்
சுற்றி வந்த நிலைமை மாறி, யாரோ ஒரு சிலருடைய பாடல்கள்மட்டும் தெய்வத்திற்கு உரியனவாக
உள்ளன; செல்வரைச் சிறப்பித்து எழுதப்படும் பாடல்களோ கட்டுரைகளோ ஒரு பாராட்டுக்
கூட்டத்திற்கு வாழ வலிமை அற்றனவாய் மறைகின்றன. மனிதன் அல்லது சமுதாயம்பற்றிய
புதிய உணர்ச்சிகளும் அழகிய கற்பனைகளுமே இலக்கியவாழ்வு பெறும் நிலைமை வந்துள்ளது.
கடவுள் வழிபாடு தனிப்பட்டவர்களின் உணர்வாக அறிஞர்களின் உள்ளத்தளவில் நிற்கிறது;
செல்வர் தொடர்பு தனிப்பட்ட எழுத்தாளரின் உறவின் அளவில் நிற்கிறது; இந்த இரண்டும்
இலக்கியப் படைப்பில் பெற்று வந்த இடத்தைச் சமுதாய உணர்ச்சி, மனித உணர்ச்சி
ஆகியவை கைப்பற்றிக் கொண்டுள்ளன என்பதைத் தமிழ் நாவல்களும் சிறு கதைகளும் தெளிவாகக்
காட்டுகின்றன.
|