இதழ்களுக்கும்
ஆண்டு மலர்களுக்கும் எழுதித் தரவேண்டிய நெருக்கடியின் காரணமாக, எப்படியோ எதையோ
படைத்து எழுத்தாளர் சிலர் அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், அத்தகைய போலிப் படைப்புகளுக்கு
இடையே, தரம் உள்ள கலைப் படைப்புகள் பல இருந்து வருகின்றன. இப்படித்தான் இருக்கவேண்டும்
என்று விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் இலக்கணம் வகுத்துக்கொண்டு, நாவல்களையும்
சிறுகதைகளையும் பார்த்து, இவை அல்ல இவை அல்ல என்று குறைகூறித் தள்ள முயல்வோர் உண்டு.
பழங்காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களுக்குப் பாட்டியல் என்று இலக்கண நூலை வைத்துக்கொண்டு
சீர்தூக்கித் தள்ள முயன்ற புலவர்களின் பயனற்ற முயற்சியையே இது நினைவூட்டுகிறது. அவர்களின்
விருப்புவெறுப்புகளையும் கடந்து எழுத்தாளர் பலர் நல்லவடிவும் உள்ளீடும் கொண்ட கதைகளைப்
படைத்துவருகிறார்கள். ஒருசாரார் விரும்புவதுபோலவே, எல்லாக் கதைகளும் அமைந்துவிட
முடியாது. கலை பலவகைப் பொருள்கள் பற்றி அமையும். பலவகை வடிவுகளைக் கொள்ளும் என்ற
உண்மையைக் கொண்டு நோக்கினால், நாவல்களும் சிறுகதைகளும் தமிழில் பற்பல வகையாய்
வளர்ந்துவரும் வளர்ச்சியை உணரலாம். காலத்திற்கு ஏற்பச் சமுதாயம் மாறிவருவதாலும்,
புதுப் புதுச் சிக்கல்கள் ஏற்படுவதாலும், இந்த நூற்றாண்டில் உள்ளீடு பல்வகையாய் மாறிவந்துள்ளது.
சமுதாயச் சிக்கல்களை அமைதியாய் நோக்குவோர், ஆத்திரத்தோடு நோக்குவோர், உலகின்
பரந்த வரலாற்றில் வைத்து இக்காலச் சிறுமையை உணாந்து நோக்குவோர், முன்னும் பின்னும்
மறந்து நிகழ்காலம் ஒன்றையே பொருளாகக் கொண்டு பெரிதாக்கி நோக்குவோர், பிறருடைய
துன்பங்களையும் போராட்டங்களையும் தம்முடையனவாகவே வலிந்து உணர்ந்து நோக்குவோர்
ஆகிய பலதிறத்தாரும் கதைகள் படைத்துத் தந்திருப்பதையே, தமிழிலக்கியத்தின் இந்த
நூற்றாண்டின் வரலாற்றில் காண்கிறோம். எழுதுபவர்கள் பல நோக்கங்களை உடையவர்களாக
இருப்பதுமட்டும் அல்லாமல், படிப்பவர்களும் பலவகை மனநிலையும் வெவ்வேறான வளர்ச்சியும்
உடையவர்களாக இருப்பதையும் மறக்கக் கூடாது. ஆகையால், சிறந்த நாவல்கள், சிறுகதைகள்
எல்லாம் எல்லார்க்கும் பிடித்தமானவை என்று சொல்லி விட முடியாது. உணர்ச்சியான போக்கும்
அழகான வடிவ அமைப்பும் உடைய கதைகளாக இருந்தாலும், கதைகள் வாழ்வோடு ஒட்டியவைகளாக,
வாழ்வையே விளக்குவனவாக இருந்தால்தான் அவை நூல் வடிவில் வந்து வாழ்தல் முடிகின்றது.
இத்தனை போராட்டங்களையும் கடந்து, தமிழிலக்கியத்தில் பல கதைகள் தோன்றித் தரமுள்ளனவாய்
விளங்குதல் போற்றத்தக்கதே. உயரிய காப்பியத் துறையிலும்,
|