வளர்ச்சிக்குப்பின்,
பல பழைய கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், பக்தர்களின் கதைகள், பஞ்சதந்திரக்
கதைகள், அரபிக் கதைகள் முதலியவை அவ்வகையான விருந்து அளித்தன. நாவல்களும் சிறுகதைகளும்
வளர்ந்த பிறகும், இந்த நூற்றாண்டின் மக்கள் மறுபடியும் காதல் கற்பனைகளையும் நடவாத
செயல்களையும் விபரீதப் போக்குகளையும் நாடும் நாட்டம் பெருகி நிற்கிறது. செயல்களை
வருணித்தல் குறைந்து மன இயல்புகளை விளக்கும் புது முறை வளர்ந்த பிறகும், காதல் மனநிலைகளையும்
காம இச்சை கொண்டோரின் விபரீதப் போக்குகளையும் விளக்கும் கதைகளை நாடும் பசி
இருந்துவருகிறது. அந்தத் தேவையை உணர்ந்த எழுத்தாளர் சிலர், தாம் படைக்கும் சிறு
கதைகளிலும் நாவல்களிலும் அந்தக் காம உணர்ச்சி அலைகளையும் முரணான போக்குகளையும்
அமைத்து அவற்றிற்கு ஏற்ற மாந்தர்களைக் கற்பனை செய்து எழுதிவருகிறார்கள். அவைகளில்
சில இலக்கிய வடிவமும் பெற்று அழகாக அமைந்துவிடுகின்றன. ஆகவே அவர்கள் பெற்ற வெற்றியைக்
கண்டு மற்றவர்களும் அதேபோக்கில் எழுத முயன்று, காமச் சுவையைப் பெருக்கிக் கலைச்
சுவையைத் தர இயலாமல் திண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட கதைகளில், தல புராணங்களில்
போலவே, நடப்பியல் காண்பது அரிதாகிறது. அவற்றுள் புகழுடன் நிலைபெற்று வாழவல்லவை
இவை என்று கூறு முடியவில்லை. எதிர்காலமே அவற்றைப்பற்றி முடிவு செய்யவல்லது என்று விடவேண்டியுள்ளது.
“என் நூல் எதிர்காலத்தில் இலக்கியப் புகழுடன் வாழ்வதுபற்றிக் கவலை இல்லை.
நிகழ்காலத்தில் என் வாழ்நாளில் எனக்குப் புகழ் தந்தால் போதும்; பணம் தந்தால்
போதும்” என்ற துணிச்சலான மனநிலையும் எழுத்தாளர் சிலர்க்கு வந்துவிட்டது.
எதிர்காலத்தைப்பற்றி மட்டும் அல்லாமல், நிகழ்காலத்தில் படிப்பவர் பலரின் இயல்பான
மனம் தவறான போக்கில் விரிவடைவதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்நிலையில்
வெளியாகும் கதைகளில் புகழ் பெற்றுள்ளவை எல்லாம் இலக்கியமாக வாழக் கூடியவை என்று
சொல்ல முடியவில்லை.
பலவகைப்
படைப்பு
பொதுவாகப்
பார்க்கும்போது, நாவல்களும் சிறுகதைகளும் ஆகிய கற்பனைப் படைப்புகள் தமிழில் பெருகிவருகின்றன
எனலாம். 1930 - க்குப் பிறகு எழுத்தாளர் பலர் தோன்றிக் கதைத் துறையில் தமிழிலக்கியத்தை
வளர்த்துவருகிறார்கள். நாவல்துறையைவிடச் சிறுகதைத் துறை சிறப்பாக வளர்ந்து வளம்பெற்று
வருகிறது என்பதில் ஐயம் இல்லை. மட்டமான - இலக்கியத் தரம் இல்லாத - படைப்புகளும்,
பிற மொழியிலிருந்து இரவல் வாங்கியோ திருடியோ எழுதும் எழுத்துகளும் இல்லாமல் போகவில்லை.
வார
|