பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 311 -

குடும்ப வாழ்வின் மேடுபள்ளங்களை நன்கு விளக்கும் நாவல் ‘தாழ்வுற்ற நெஞ்சம்’ கே. ஜயலட்சுமி எழுதியது. கிருத்திகா (மதுரம்) எழுதியவைகளும் அத்தகையவை. மனத்தின் உள்நிகழ்வுகளைக் காட்டுவதில் அவருடைய எழுத்துகள் ஆற்றல்பெற்றுள்ளன. ‘புகை நடுவில்’, ‘பொன்கூண்டு’ குறிப்பிடத் தகுந்தவை.

மொழிபெயர்ப்புக் கதைகள்

மற்ற மொழிகளில் உள்ள நாவல்களையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுக்கு அளித்துவரும் மொழிபெயர்ப்பாளர்களின் இலக்கியத் தொண்டையும் போற்ற வேண்டும். அவர்களுள் கா. ஸ்ரீ. ஸ்ரீ., த. நா. குமாரசாமி, த. நா. சேனாபதி, ஜயராமன் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மராத்தியில் சிறந்த எழுத்தாளராகிய காண்டேகரின் நாவல்களையும் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ. காண்டேகரின் இரு துருவம், கிரௌஞ்சவதம், எரிநட்சத்திரம் முதலியன தமிழரிடையே தமிழ் நாவல்கள் போலவே உலவின. மராத்தியில் பட்கே என்பவரின் கதைகளையும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர். வங்காளத்திலிருந்து சரத்சந்திரர், பங்கிம்சந்திரர் ஆகியோரின் நூல்கள் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழில் பரவின. ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளையும் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து அளித்துப் புகழ்பெற்றவர்கள் குமாரசாமியும் சேனாபதியும். இந்தியில் உள்ள கதைகளையும் பிரெஞ்சு ஜெர்மன் ரஷ்ய மொழிகளின் கதைகளையும் சிலர் மொழி பெயர்த்துத் தந்து வருகிறார்கள். அவைகளால், நாவல் சிறு கதைகள் படிப்பவரின் சுவையும் ஆர்வமும் விரிவடைந்து வருகின்றன எனலாம். திராவிட மொழிகளாகிய மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளின் கதைகளையும் நாடகங்களையும் மொழிபெயர்க்கும் முயற்சியும் தொடங்கியுள்ளது. கன்னடத்தில் காரந்த் என்பவரின் ‘மரளிமண்ணிகே’ சித்தலிங்கய்யாவால் நல்ல வடிவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எம். எஸ். கமலா, கோபிநாத் முதலானவர்கள் தெலுங்கு மலையாளம் முதலான பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தருகின்றவர்கள்.

கற்பனை வேட்கை

எல்லா நாட்டு மக்களுக்கும் இருப்பதுபோலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் காதல் கற்பனைகளிலும் அற்புத நிகழ்ச்சிகளிலும் தீராத ஆர்வம் இருந்துவருகிறது. ஒரு காலத்தில் காப்பியங்களும் புராணங்களும் அந்தப் பசிக்கு ஏற்ற உணவாக இருந்து மக்களை மகிழ்வித்தன. உலா முதலியவைகளும் தலபுராணங்கள் பலவும் எழுதப்பட்ட காலத்திலும், அவற்றால் அப்படிப்பட்ட உணவு கிடைத்துவந்தது. அச்சுயந்திர