பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 310 -

மனப்பான்மையுடன் புதியன படைக்கின்றவர்களையோ காண்பது அரிது. வாழ்வின் மாறுதல்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சிக்கல்களையும் அவர்கள் காணும் காட்சி, ஒரு சோலையுள் வாழ்ந்து அதன் மாறுதல்களையும் பிறவற்றையும் அன்றாடம் கண்டு அனைத்தையும் சேர்த்தே கட்புலனுக்கு விருந்தாகக் காணும் பொறுமையான காட்சியாக உள்ளது. சூடாமணி தம் மனோதத்துவக் கதைகளில் மன அலைவுகளைச் சித்தரிக்கிறார். ‘சோதனையின் முடிவு’ குறிப்பிடத் தகுந்த நாவல்.

குடும்பப் பெண்களைப் படைத்துக் காட்டும் கதைகள் எழுதுவதில் வல்லவர் சரோஜா ராமமூர்த்தி. அவர் படைத்துக் காட்டும் குழந்தைகள், படிப்பவரின் நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை. அவருடைய இனிய நடை, குடும்பப் பண்பாட்டை விளக்குவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ‘லட்சியவாதம்’, ‘பனித்துளி’, ‘முத்துச் சிப்பி’ அவருடைய நாவல்கள்.

கிருஷ்ணா (அம்புஜம்) படைத்தவை ‘ராஜி’, ‘மதுக்கிண்ணம்’ ஆகிய நாவல்கள். விமலா ரமணி, வளர்த்தவர்களுக்கு உரிய கதைகளோடு குழந்தைகளுக்காகவும் எழுதுபவர். குயிலி ராஜேஸ்வரியின் ‘உணர்ந்த நெஞ்சம்’, ‘தெய்வம் சிரித்தது’ என்பவை நல்ல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள். கி. சரஸ்வதி, கி. சாவித்திரி, அநுத்தமா ஆகியோரின் படைப்புகளில் பல, கலைவடிவம் நிரம்பியவை; குடும்பப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை.

புதுமைக் கலையார்வம் உடைய மற்றோர் எழுத்தாளர் கோமகள் (ராஜலட்சுமி). ‘பனிமலர்’, ‘அன்பின் சித்திரம்’ சுவையான நாவல்கள். பல நல்ல சிறுகதைகளையும் படைத்து வருகிறார். ‘கானல் நீர்’ என்னும் சிறுகதையில் ஆணும் பெண்ணுமாகக் காதலர் இருவர் ஒரு பூங்காவில் மாலை நேரங்களில் பொழுது போக்கிக் காதலராய்க் கொஞ்சிப் பேசுவதை மறைந்திருந்து காண்கிறார் ஒருவர். தம் இளமையில் அதுபோல் காதல் கொண்டு பழகி மணந்துகொள்ளாமல், பெற்றோரின் விருப்பப்படி ஒருத்தியை மணந்துகொண்ட குறையான வாழ்வை நினைத்து வருந்துகிறார். அதனால் வாழ்க்கையில் பெறத்தக்க ஒரு பேற்றை இழந்துவிட்டதாக நோகிறார். பலநாள் அந்தக் காட்சியைக் கண்டு அவர்களின் காதலை போற்றுகிறார்; வாழ்த்துகிறார். ஆனால், அவனுக்கும் வேறொருத்திக்கும் திருமணம் ஆகிறது. பூங்காவில் நிகழ்ந்த காதல் முறிந்ததோ என்று ஐயுறுகிறார். திருமணம் நடந்து சில வாரம் கழிந்த பிறகு பூங்காவுக்குச் செல்லும்போது, மறுபடியும் பழைய இருவரையும் அங்கேயே அதே நிலையில் காண்கிறார். தாம் காதல் என நம்பியது, கானல் நீராய்ப் போனதை எண்ணி வெறுப்படைகிறார்.