பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 309 -

அமைகிறது. கி. சந்திரசேகரனின் பச்சைக்கிளி, கண்ணில்லாத கபோதி என்னும் சிறுகதைகள் இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. த. நா. குமாரசாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே.

மகளிர் அளிக்கும் கதைகள்

பெண்கள் பலர் கதைகளைப் படைத்தளித்துப் புகழ் பெற்றிருக்கிறார்கள். பெண்களின் மனப் போராட்டங்களையும் குடும்பச் சிக்கல்களையும் குழந்தைப் பாசத்தையும் வாழ்வின் மென்மைப் பகுதிகளையும் சித்தரித்துச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதுவதில் அவர்களின் சிறப்பியல்பு விளங்குகிறது. கோதைநாயகி அம்மையார் பத்திரிகை நடத்திப் பல நாவல்கள் எழுதியவர். அவர் காலத்திற்குப் பிறகு பெண்களின் ஈடுபாடு இந்தத் துறையில் மிகுதியாயிற்று. ‘காஞ்சனையின் கனவு’, ‘மிதிலா விலாஸ்’ முதலியவற்றின் ஆசிரியர் ‘லட்சுமி’ என்னும் திரிபுரசுந்தரி கட்டுக்கோப்பான நாவல்கள் எழுதுவதில் வல்லவர். ‘பெண்குரல்’, ‘மலர்கள் அமுதமாகி வருக’, ‘குறிஞ்சித் தேன்’, ‘வளைக்கரம்’ முதலியன ராஜம் கிருஷ்ணனின் அழகிய படைப்புகள். கோவா விடுதலைப் போராட்டத்தை வைத்து எழுதப்பட்ட நாவல் ‘வளைக்கரம்’. நீலகிரி மலையில் நடைபெறும் மின்சார அணைத் திட்டங்களுக்காகக் கணவரோடு வாழ்ந்தவராகையால், அந்த மலையில் வாழும் மக்களோடும் தொழில் புரியும் ஆட்களோடும் பழகிய அனுபவம் கொண்டு ‘குறிஞ்சித் தேன்’ முதலிய நாவல்களை எழுதியுள்ளார். ஜோகி என்னும் படக இனத்தானுடைய வாழ்வில் கண்ட மாறுதல்கள் அந்த நாவல்களில் படங்களாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத் திட்ட வேலைகளால் மலைவாழ்வில் இருந்த அமைதியும் நிறைவும் எப்படிக் குலைந்து போயின என்பதை ஆசிரியர் சுவையாகக் காட்டுகிறார். பணத்தின் சுவை கண்டிராத மலைவாழ் குடும்பங்கள், பணத்துக்காகவே உழைக்கும் மனப்பான்மை பெறுகிறார்கள். ஜோகியின் குடும்பம் பழம் பண்பாட்டை நம்பியிருந்தமையால் பின்தங்குகிறது; பணம் தரும் பயிர்கள் விளைத்துப் புது வழிகளை மேற்கொண்ட கரியமல்லரின் குடும்பம் முன்னேறுகிறது. அங்கே ஒருவரும் ஒருத்தியும் காதல் கொள்கிறார்கள். குடும்பச் செல்வ வேறுபாடுகள் குறுக்கே நிற்கின்றன. காதல் வெற்றிபெறுகிறது. அதற்கு இடையே ஜோகியின் தாய் முதலானவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி மடிகிறார்கள். ஓர் உரைநடைக் காப்பியம் என்று சொல்லத்தக்க சிறப்போடு கதை அமைந்துள்ளது.

சூடாமணியும் வசுமதி ராமசாமியும் சிறுகதை, நாவல் ஆகிய இரு துறைகளிலும் படைத்துத் தந்தவர்கள். இத்தகைய பெண் எழுத்தாளர்களுள், இன்றைய சமுதாயத்தை எண்ணிக் கொதித்து எழுதுகிறவர்களையோ, புரட்சி