குழந்தையைத்
தாழ்ந்த குலத்துக் கிழவன் ஒருவனிடத்தில் ஒப்படைக்கிறாள். அந்தக் கிழவனே தனக்கு
இறுதிக் கடன்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறாள்; அவ்வாறே அவனும்
செய்து முடிக்கிறான்.
‘பவழமல்லிகை’,
‘மிட்டாய்காரன்’ முதலான சிறுகதைகள் பலவற்றைப் படைத்துத் தந்தவர்
கி. வா. ஜகந்நாதன். அவர் ‘கலைமகள்’ என்னும் இதழின் ஆசிரியர்.
அதன் வாயிலாகப் பல நல்ல சிறுகதையாசிரியர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் எழுதும் கதைகளில் பழைய மரபுகள் புதிய ஒளி வீசி விளங்கும். ‘பவழமல்லிகை’
என்ற கதையில், சிறுமி ஒருத்தியின் தூய அன்பையும், அதை உணர்ந்துகொண்ட ஓர் அம்மையாரின்
இரக்க நெஞ்சையும் காண்கிறோம். அந்தச் சிறுமியின் அன்பை உணராத வீட்டுக்காரர்
முதலில் முரட்டுத்தனமாய் நடந்து இடையூறு விளைத்தபோதிலும், பிறகு மனமாறுதல் அடைந்து
குழந்தையின் விருப்பப்படி பவழமல்லிகைப் பூக்களை எடுத்துச் செல்ல இடந் தருகிறார்.
அதைப் படிப்படியாக விளக்கிக் கதை சொல்லும் முறை சுவையாக உள்ளது. ‘மிட்டாய்க்காரன்’
என்ற கதையிலும் ஒரு நல்ல குழந்தையின் மனத்தையும் முரட்டுத்தனம் உடையவன் மனமாறுதல்
பெறுவதையும் காண்கிறோம். குழந்தை மிட்டாய் எடுத்துத் தின்பதைக் கண்ட மிட்டாய்க்காரன்,
தரித்திரம் பிடித்த கையால் எடுத்துவிட்டது என்று கடிந்து ஓங்கி அடிக்கிறான். மிட்டாய்க்
கூடையை எடுத்துச் செல்லும் வழியில் கல்தடுக்கிவிழ, எல்லா மிட்டாய்களும் சாய்க்கடையில்
கொட்டிவிடுகின்றன. உடனே ஒரு மிட்டாய்க்காகக் குழந்தையை அடித்த கொடுமைக்காக மனம்
வருந்தி உருகுகிறான். ஓடிவந்து குழந்தைக்கு முத்தம் தந்து அன்பு செலுத்துகிறான்.
தி.
ஜ. ர. வின் நொண்டிக்கிளி முதலிய சிறுகதைகள் நுட்பமான கலைவடிவு உடையவை. சிறுகதை
இலக்கியம் படைப்பதில் வெற்றி கண்டவர் அவர்.
நாட்டில்
நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல் அமைதியாக
ஒரு மூலையில் இருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டு உணர்ந்து அந்த அடிப்படையைக்
கொண்டு கதைகள் எழுதுவோர் சிலர் உண்டு. உண்மையை நோக்கினால், அரசியல்கொந்தளிப்பு
சீர்திருத்தவேகம் முதலியவை சமுதாயம் என்னும் கடலின் மேற்பரப்பில் காணும் அலைகளும்
ஆரவாரங்களும் ஆகும். குமுறும் கடலின் அடிப்பகுதி பெரும்பாலும் அமைதியாக இருப்பதுபோலவே,
சமுதாயத்திலும் குடும்ப இன்பதுன்பம் முதலியவை என்றும்போல் உள்ளன. அவற்றைக் கண்டு
உணர்ந்து சொல்லோவியமாக்கித் தரும் கலையுள்ளம் சிலர்க்கு இயல்பாக
|