அவருடைய
உறவினர் மு. ராகவ ஐயங்கார் (1878 - 1960) சிறந்த ஆராய்ச்சியாளர். இளமையிலேயே
‘செந்தமிழ்’ என்ற இலக்கிய இதழுக்கு ஆசிரியராகத் தொண்டு புரிந்தார்.
இலக்கியம் பற்றியும் வரலாறுபற்றியும் அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பயனுள்ளவை.
அவருடைய தமிழ்நடை அருஞ்சொற்கள் கலந்த இலக்கியநடையே.
இலக்குமண
பிள்ளை (1864 - 1950) அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருந்து பணிபுரிந்தவாறே
தமிழ் வளர்ச்சிக்கும் தக்க தொண்டு ஆற்றியவர். இயல் (இலக்கியம்), இசை, நாடகம்
என்ற மூன்று துறைகளிலும் தொண்டுசெய்த தமிழறிஞர் ஒரு சிலரே. அவர்களுள் முதன்மையானவர்
இலக்குமண பிள்ளை. ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்ததோடு அல்லாமல், தமிழில் புதிய
நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். கவிதை எழுதும் திறமையும் அவர்க்கு இருந்தது. கட்டளைக்கலித்துறை
என்ற செய்யுள் வகையில் ஒருவகைப் புதுமையை, எதுகை மோனைகள் இல்லாமல் எழுதும் முறையைப்
புகுத்தியவர் அவர். வீணை மீட்டிப் பல இராகங்களைப் பாடி இசைக்கும் ஏற்ற கீர்த்தனைகள்
இருநூற்றுக்கு மேற்பட்டவை இயற்றினார்.
வ.
உ. சி., சிவா
தேச
விடுதலைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று தொண்டு செய்தவர்களுள் சிலர் தமிழ்
இலக்கிய வளர்ச்சிக்கும் பணி புரிந்திருக்கிறார்கள். அவர்களுள் கப்பலோட்டிய தமிழன்
எனப் புகழ்பெற்ற வ. உ. சி. சிதம்பரம் பிள்ளை (1872 - 1931) ஒருவர். 1908-ஆம்
ஆண்டில் சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கித் தூத்துக்குடி துறைமுகத்தில்
ஆங்கிலக் கம்பெனிகளுக்குப் போட்டியாகக் கப்பல் விட்டார். ஆங்கில ஆட்சியின்
கொடுமைக்கு ஆளானார். பல ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டு வருந்தினார். ஜேம்ஸ் ஆலன்
என்ற ஆங்கில அறிஞரின் கருத்துகளைத் தமிழ்ப்படுத்தி மூன்று நூல்களாக வெளியிட்டார்.
மனம்போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என்பவை அந்த நூல்கள். உயர்ந்த
மெய்யுணர்வுக் கருத்துகளைச் செறிவான தமிழ்நடையில் புலப்படுத்தும் நூல்கள் அவை. மெய்யறிவு,
மெய்யறம் என்பவை அவரே இயற்றிய நீதி நூல்கள். அவற்றில் திருக்குறள் கருத்துகளை
ஒட்டிச் சிறந்த முறையில் வாழ்க்கையின் உண்மைகளை விளக்கியுள்ளார். கடவுள் உணர்வு
முதலியவற்றைத் தெளிவாக ஊட்டும் நூறு பாடல்களை இயற்றி ‘என் பாடல் திரட்டு’
என்ற பெயரால் ஒரு நூல் வெளியிட்டார். தம் மனைவியின் வாழ்க்கை வரலாற்றை உருக்கத்துடன்
செய்யுள் வடிவில் எழுதியுள்ள
|