‘வள்ளியம்மை
சரித்திரம்’ என்னும் நூலும் குறிப்பிடத்தக்கது. மக்களுக்காகத் தொண்டு செய்த ஆர்வமும்,
மேடைகளில் பேசிப் பேசி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த பயிற்சியும் இருந்தபடியால்,
அவருடைய நடையில் நெகிழ்ச்சி காணப்படுகிறது. கவிஞர் பாரதியார்க்கும் பாலகங்காதர
திலகருக்கும் நண்பர். அவர் வறுமையில் வாடிய காலத்தில் திலகர் அவர்க்குப் பொருளுதவி
செய்துள்ளார். நாட்டுப்பற்றில் வளர்ந்த அவருடைய தீவிர வாழ்க்கை, மொழிப்பற்றில்
ஊன்றி இலக்கியத் தொண்டுக்கு இடந் தந்தது, பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
உரைநடையிலும் சில நூல்கள் எழுதினார். இன்று அவருடைய நூல்களைக் கற்பவர் குறைவாக இருந்தபோதிலும்,
அவருடைய புகழைப் பரப்பும் வகையில் மன்றங்கள் அமைத்துப் பணிபுரிவோர் பலர்.
நாட்டின்
விடுதலைப்போரில் ஈடுபட்டுப் பெருந்தொண்டு புரிந்து சிறையில் பல துன்பங்களுக்கு ஆளாகி,
சிதம்பரம்பிள்ளைக்கு நண்பராக விளங்கியவர் சுப்பிரமணிய சிவா (1884 - 1925).
பாரதியாரின் பாடல்கள் நாடெங்கும் பரவுவதற்குப் பெருங்காரணமாக இருந்தவர். பத்திரிகைகள்
நடத்தியும் கட்டுரைகள் எழுதியும் நாட்டு உணர்ச்சியையும் இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்து
வந்தார். முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றினார். ‘பழைய நாரதர்’
என்ற புனைபெயர் கொண்டு, நகைச்சுவையும் வீரச்சுவையும் மிகுந்த கட்டுரைகள் பல எழுதினார்.
திலகரிடத்தில் பெரிதும் பற்றுக்கொண்டவர். திலகர் என்ற சொல்லுக்கே சுதந்தரம்
என்ற பொருள் அகராதியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் நாடகத்துறையிலும்
தொண்டுபுரிந்தார். சிவாஜி, தேசிங்கு ஆகிய நாட்டுத் தலைவர்களின் வரலாற்றை நாடகங்களாக
எழுதினார்; மேடையில் நடிக்கவும் செய்தார். தேசீய உணர்ச்சியை எழுப்ப நாடகங்களை
எழுதிப் பயன்படுத்தியவர் அவர்.
சாமிநாதய்யர்
டாக்டர்
உ. வே. சாமிநாதய்யர் (1855 - 1942) இந்த நூற்றாண்டில் அழியாப் புகழுக்கு உரிய
சிறந்த தமிழ்த்தொண்டு ஆற்றியவர். பனை ஓலையில் உள்ள தமிழ் ஏடுகளைத் தேடுவதிலும்,
அவற்றைக் கற்று ஆராய்ந்து, படி எடுத்துப் பிழையறப் பதிப்பிப்பதிலும், அவற்றிற்கு
ஆராய்ச்சித் தரம் உள்ள முகவுரையும் ஆசிரியர் வரலாறும் நூற்பொருள்பற்றிய குறிப்புகளும்
எழுதுவதிலும் அயராமல் உழைத்து வாழ்நாள் எல்லாம் செலவிட்டார். அத்தகைய இடைவிடாத
உழைப்பின் பயனாக, பழைய சங்க நூல்கள் உயர்ந்த முறையில் வெளிவந்தன. சீவகசிந்தாமணி
முதலான காப்பியங்கள் வெளிவந்தன.
|