பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 322 -

பூவை கலியாணசுந்தரர் (1854 - 1918) பல செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் எழுதியவர். சில இலக்கிய நூல்களும் சைவ சமயத்தின் விளக்கம்பற்றிய நூல்களும் இயற்றினார்.

வழக்கறிஞராக இருந்த கே. எஸ். சீனிவாச பிள்ளை (1852 - 1929) கல்வெட்டு ஆராய்ச்சியும் வரலாற்று ஆராய்ச்சியும் செய்தார். தமிழ் வரலாறு என்ற பெயரால் நூல்களைக் காலமுறைப்படி ஆராய்ந்து நல்ல இலக்கிய வரலாற்று நூல் எழுதினார்.

பா. வே. மாணிக்க நாயக்கர் (1871 - 1931) அரசாங்கத்தில் பொறியியல் அறிஞராக (எஞ்சினீயராகப்) பணியாற்றியவர். பிற்காலத்தில் அவருடைய நுண்ணிய அறிவு தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. ‘கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்’, ‘அஞ்ஞானம்’ முதலியன அவர் நூல்கள். அவருடைய எழுத்தில் எள்ளல் (நையாண்டி) என்னும் சுவை நிரம்பியிருக்கும். தமிழ் ஒலிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அவர்க்கு ஈடுபாடு மிகுதி.

செல்வக்கேசவராய முதலியார் (1864 - 1921) பழமொழிகள் கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு ஆழமும் மெருகும் தந்தவர். திருவள்ளுவர், கம்பநாடர், தமிழ், தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, கண்ணகி கதை, அபிநவக் கதைகள், பஞ்சலட்சணம் முதலியவை அவருடைய உரைநடை நூல்கள். அக்பர், ரானடே, ராபின்சன் குரூசோ முதலானவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழுக்கு அளித்தார்.

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் (1857 - 1946) இந்த நூற்றாண்டின் புது வளர்ச்சிகளை நன்றாக அறிந்திருந்தும், பழைய இலக்கியங்களின் போக்கையே பின்பற்றி நூல்கள் படைத்தார். சிலேடை, யமகம், திரிபு என்னும் சொல்லலங்காரங்களை அமைத்தும் எழுதினார். ‘நெல்லைச் சிலேடை வெண்பா’ அத்தகையது. அது திருநெல்வேலியின் பெருமையைப் புகழ்ந்து பாடியது. ஆங்கிலப்புலவர் மில்டன் எழுதிய ‘சுவர்க்க நீக்கம்’ (Paradise Lost), ஸ்பென்சர் எழுதிய கல்வி ஆகிய இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். முன்னதை விருத்தம் என்னும் செய்யுளில் இயற்றினார். கோம்பி விருத்தம், அகலிகை வெண்பா என்னும் செய்யுள் நூல்களும் அவர் படைத்தவை.

சி. கே. சுப்பிரமணிய முதலியார் (1878 - 1961) கோயமுத்தூரில் வழக்கறிஞராக இருந்து, தேசீய வீரர் சிதம்பரம் பிள்ளைக்காக வழக்காடியவர். சைவ சமயத்தில் பற்று மிகுந்த தமிழ் அறிஞர். சில செய்யுள் நூல்களும் பல உரைநடை நூல்களும் எழுதினார். உரைநடை நூல்களுள் சேக்கிழாரைப்பற்றிய நூல் புகழ் உடையது. தம் சொந்த வாழ்க்கை வரலாற்றையும் ‘ஒரு பித்தனின் சுயசரிதம்’ என்ற பெயரால் எழுதினார். பெரிய புராணம் முழுமைக்கும் விரிவான உரை இயற்றினார்.