பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 321 -

இலக்கிய ஆராய்ச்சி நூல்களுள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி என்பவை புகழ்பெற்றவை. தமிழில் இலக்கிய ஆராய்ச்சி வளர்வதற்கு வழிகாட்டியவர் அவர். 1916-ஆம் ஆண்டு முதல், அவர் பிறமொழிச் சொற்கள் கலக்காத தனித்தமிழில் எழுதும் ஆர்வம் கொண்டார். தம் பெயரைத் தமிழாக்கிக்கொண்டதுபோலவே, தாம் நடத்திவந்த ஞானசாகரம் என்னும் இதழின் பெயரையும் அறிவுக்கடல் என்று தூய தமிழ் ஆக்கினார். தனித் தமிழ் ஓர் இயக்கமாக வளரக் காரணமாக இருந்தார். சைவ சமயம்பற்றியும் தமிழ்மொழி தமிழர் பெருமைபற்றியும் வளமான உரைநடையில் நூல்கள் பல எழுதினார். சாகுந்தல நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘அம்பிகாபதி - அமராவதி’ என்னும் புலவரின் வரலாறு அமைந்த நாடகம் இயற்றினார். நாவல் என்னும் துறையிலும் ஆர்வம் கொண்டு, குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள் ஆகிய இரண்டையும் எழுதினார். செய்வன திருந்தச் செய்தல், ஒழுங்குபெற அமைத்தல் இவை அவருடைய இயல்பு. அவருடைய தமிழ் நடையிலும் அந்த இயல்பைக் காணலாம். அவர்க்கு ஆங்கில அறிஞர்களின் நூல்களில் இருந்த ஈடுபாடு மிகுதி. அவர் எழுதிய கட்டுரைகளிலும் ஆராய்ச்சியிலும் அந்த அறிஞர்களின் போக்கைப் பின்பற்றியிருக்கிறார். ஆயினும் தமிழிலக்கிய மரபை ஒட்டியே அவருடைய சிந்தனை இயங்கியது. அதனால் அவர் படைத்த நூல்கள் தமிழுக்கு வாழ்வும் வளமும் பெருக உதவியாயின. மக்கள் அவரை மறவாமல் போற்றுவது, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்ற காரணத்தால் ஆகும். அவர் சீர்திருத்த ஆர்வம்கொண்டு சைவ சமயத்தைப் போற்றியவர். ‘மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்’ அவருடைய விரிவான ஆராய்ச்சி நூல். ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்’, ‘தமிழர் மதம்’, ‘அம்பலவாணர் திருக்கூத்து’, ‘தமிழ்த்தாய்’, ‘தமிழ்நாட்டவரும் நாட்டவரும்’, ‘முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவர்’, ‘மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி’, ‘அறிவுரைக் கொத்து’ என்பன அவருடைய சிறந்த நூல்கள்.

மகிழ்நன் முதலானவர்கள்

க. ப. சந்தோஷம் ‘மகிழ்நன்’ என்ற பெயர் பூண்டு இந்த நூற்றாண்டில் பல கட்டுரைகள் சுவையாக எழுதியவர். ஆங்கில நகைச்சுவையாசிரியர்களைப் பின்பற்றித் தமிழுக்கு நகைச்சுவை இலக்கியம் அளித்தவர் அவர். அவருடைய எழுத்துகளில் புதிய நோக்கும் புதிய அமைப்பும் உண்டு. ‘வடக்கும் தெற்கும்’ என்பது சுவையான புதுமுறையில் எழுதப்பட்ட நூல். அவருடைய நடை தனித் தமிழால் தெளிவாக அமைந்தது.