பக்கம் எண் :

100

Tamil Virtual University

விளையாட்டு
சிறு வீடு

மார்கழி மாதம் சிறுவர்கள் சிறுவீடு கட்டி விளையாடுவார்கள். அங்கே செங்கல் அடுப்புபோட்டு சிறு பொங்கல் பொங்குவார்கள். திருமணம், குடும்ப விவகாரங்கள் எல்லாம் இங்கே நடக்கும். வீட்டில் நடந்த தகராறுகள் இங்கே நாடகமாக நடிக்கப்படும். ஒரு சிறுமி தனது கணவனான சிறுவன், சோறு இல்லை என்ற காரணத்தால், தன்னை அடிக்க வந்ததைத் தோழியிடம் கூறுகிறாள்: நண்டு ஒன்று பிடித்து துவையல் அரைத்து வைத்து கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாளாம். அவன் நெடு நேரம் வராததால் அவள் சாப்பிட்டு விட்டாளாம். அவள் சாப்பிட்டவுடன் அவன் வந்தானாம். உணவு இல்லை. அவன் அவளை அரட்டுவதையும் மிரட்டுவதையும் அவளே சொல்லட்டும்.

  நண்டே நண்டே சிறு
செங்கால் நண்டே,
உசிரிருக்க ஒடிருக்க
உன்னைப் பிளந்து,
ஒரு குத்துப் புளியங்கா
தொவையல் வச்சி,
கன்னாங் கலத்தையும்
கழுவி வச்சி,
வருவான் வருவான்னு
வழி பார்த்தேன்
வராது போகவும்
வழிச்சுக்கிட்டேன்.
வந்தாண்டியம்மா மலை வயித்தன்,
குத்தக் குத்த வந்தாண்டி
குரங்குமூஞ்சி,
ஏலகிரி யெல்லாம் கிடுகிடுக்க
எடுத்தாண்டி சிலுக்குத் தடியை
அடிக்க அடிக்க வந்தாண்டி
ஆனைவயித்தன்,
அடிச்சிட்டுப் போகச் சொல்லு-
ஙொப்பன் மவனை!
 

வட்டார வழக்கு: வழிச்சுக்கிட்டேன்-தின்றுவிட்டேன்; வயித்தன்-வயிற்றான் (வயிறு உடையவன்); ஙொப்பன்-உங்கள் அப்பன்.

சேகரித்தவர்:
S. சடையப்பன்

இடம்:
அரூர் வட்டம்,
த ருமபுரி மாவட்டம்.