கண்ணாமூச்சி
இவ்விளையாட்டிற்குத் தலைவன் ஒருவன் வேண்டும். அவனை “தாச்சி”
என்று அழைப்பார்கள். சில சிறுவர்களில் ஒருவனைத் தேர்ந்தேடுத்து அவன் கண்களிரண்டையும்
தாச்சி பொத்திக் கொள்வான். மற்றவர்கள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வார்கள். எல்லோரும்
ஒளிந்து கொண்டபின் தலைவன் கண்களைத் திறந்துவிடுவான். அவன் தேடிச் சென்று யாரையாவது
தொடவேண்டும், அதற்குள் ஒளிந்து கொண்டவர்கள் ஓடிவந்து தலைவனைத் தொடவேண்டும். எல்லோரும்
தொட்டு விட்டால் தேடிச் சென்றவனே மறுபடி கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். இவ்விளையாட்டில்
முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வதற்கு யாரும் இணங்க மாட்டார்கள். முதலில் யார்
பொத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு வழி கையாளப்படுகிறது. தாச்சி
எல்லோரையும் வரிசையாக நிறுத்துவான் ஒரு பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து ஆளுக்கு
ஒரு சொல் வீதம் சொல்லி, தொட்டுக் கொண்டு வருவான். பாட்டின் கடைசிச் சொல் வந்ததும்
யாரை அவன் தொடுகிறானோ, அவன் விலகிக் கொள்வான். மீண்டும் பாட்டைச் சொல்லி முன்
போலவே ஒவ்வொருவராகத் தொட்டு வருவான். இவ்வாறகக் கடைசியாக மீதமிருப்பவன் கண்களைப்
பொத்திக் கொள்ள வேண்டும். அப்பாட்டின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்படுகிறது.
கண்ணைக் கட்டவேண்டியவனை வேறொரு முறையிலும் தேர்ந்தெடுப்பதுண்டு.
பலர் வட்டமாக உட்கார்ந்து கொள்வர். அவர்கள் ஒரு கையைத் தலைமேல் வைத்துக் கொள்வர்.
விளையாட்டுத் தலைவன் ஒரு பாட்டின் சொற்றொடர்களைச் சொல்லிக்கொண்டே தொட்டுக் கொண்டு
வருவான். கடைசியில் ‘கையெடு’ என்று சொல்லிக் கொண்டு யாரைத் தொடுகிறானோ அவன் விலகிக்கொள்வான்.
கடைசியில் ஒருவன் மீதம் இருக்கும்வரை இது நடைபெறும்.
மீதமிருப்பவன் விலகியவர்கள் ஒவ்வொருவருடைய கையையும், பிடித்துத்
தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு சுடுகிறது, சுடுகிறது என்று சொல்வான். யாராவது ஒருவனுடைய
கையைக் கன்னத்தில் வைத்துக் கொள்ளும் போது ‘குளிர்கிறது’ என்று சொல்வான். அவன்தான்
கண்ணைப் பொத்திக் கொள்ள வேண்டும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன.
(குறிப்புரை
S.S.
போத்தையா)
|
பச்சத் தவக்காட பளபளங்க
பழனி பச்சான்-மினு மினுங்க
செங்கரட்டி-சிவத்தப்பிள்ளை
கிண்ணா வந்தான்-கிணுக்கட்டி
உடும்பு-துடுப்பு
மகா-சுகா
பால்-பறங்கி
எட்டுமன்-குட்டுமன்-ஜல்
ஒருப்பத்தி-இருப்பத்தி
ஒரிய-மங்கலம்
சீப்பு-சினுக்கவலி
உங்கையா-பேரன்ன?
முருக்கந் தண்டு-திண்ணவரே
முள்ளிச் சாறு-குடிச்சவரே
தார் தார்-வாழைக்காய்
தாமரைக் குத்தி-வாழைக்காய்
புதுப் புது மண்டபம்
பூமா தேவி கையெடு |
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
நெல்லை மாவட்டம். |
|