பக்கம் எண் :

113

Tamil Virtual University


மேல் விலாசம்

அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான். அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.

பெண் : நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?
சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நிண்ணு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து
வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை
போலீசு வேட்டி கட்டி
புதுமலைக்குப் போறவரு
போலீசு வேட்டியில
போட்டு விட்டேன் மேவிலாசம்
கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்
துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம் பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?

வட்டார வழக்கு: வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்; கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?; மேவிலாசம்-மேல்விலாசம்.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.