| 
 
  
 
  அதனால் கொள்ளைகளை, நாட்டுப் பாடகர்கள் ஆதரிக்கிறார்கள் 
 என்பதல்ல. பணக்கார எதிர்ப்பு உணர்ச்சியே ஜம்புலிங்கத்தையும் சந்தனத் தேவனையும் 
 வீரர்களாகக் கருதச் செய்கின்றன. கதைப் பாடல்களில் தன்னலம் கருதாமல், கிராம மக்களின் 
 நலனுக்காக உயிர் துறந்த வீரர்களே, போற்றுதலுக்கு உரியவர்களானதைக் கண்டோம். 
 கொள்ளைக்காரர்கள் அவ்விதப் போற்றுதலுக்கு உரியவராக மாட்டார்கள். கிராம மக்கள் 
 பணக்காரர்களுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது துணிவாக அவர்கள் வீட்டை 
 உடைத்துக் களவு செய்யும் திருடர்கள்கூட மக்களுக்கு வீரர்களாகத் தோன்றினார்கள். 
 களவும், கொலையும் சுய நலத்தோடு செய்யப்படுவன. சுயநலமின்றி கிராமச் சுரண்டல் முறையை 
 எதிர்த்து நின்ற வீரர்களைக் கிராம மக்கள் தெய்வப் பிறவிகளெனப் போற்றுவர். அவ்வீரர்களுக்குக் 
 கொடுத்த மதிப்பு கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும் என்றுமே கிடைத்ததில்லை, 
 ஆங்கில நாட்டுப் பாடல்களில் ராபின்ஹுடைப் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் 
 இருக்கின்றன. அவன் ஒரு கொள்ளைக்காரன். ஆனால் அவன் காலத்தில் அரசாண்ட அரசன் மக்களைக் 
 கொள்ளையடித்து ஆடம்பரச் செலவு செய்தான். ராபின்ஹுட் காடுகளில் மறைந்திருந்து, 
 அசரனுடைய உடமைகளைக் கொள்ளையிட்டான். கொள்ளையிட்டதைத் தான் வைத்துக் 
 கொள்ளவில்லை. மக்களுக்குப் பகிர்ந்தளித்தான். அநியாயத்தை எதிர்த்து அவன் கொள்ளை 
 செய்தான். மக்கள் உள்ளத்தில் அவன் இடம் பெற்றான். மக்கள் அவனை மறந்து விடாமல் 
 நாட்டுப்பாடல்களில் அவன் நினைவை நிலைநிறுத்தினர். 
 
அமெரிக்காவில் ‘Cow boys’ என்ற சட்ட விரோதமான 
 வேட்டைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் சர்க்கார் காடுகளில் நுழைந்து காட்டு 
 எருமைகளையும், மாடுகளையும் வேட்டையாடி, தோலுரித்து தோலைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். 
 போலீசார் எதிர்த்தால், அவர்களும் எதிர்த்துச் சுடுவார்கள். இவர்கள் சட்டத்தின் 
 பிடிக்குள் அகப்படாமல் காட்டு ஓரங்களில் இருந்த சிற்றூர்களில் தலை மறைவாக இருந்துவிட்டுப் 
 போய் விடுவார்கள். இவர்கள் துணிவு மிக்க இளைஞர்கள். ஊர்களில் வாழும்போது மனித 
 உறவை பெரிதும் நாடுவார்கள். கன்னிப் பெண்கள் அவர்களை மிகவும் விரும்புவார்கள். அவர்கள் 
 உறவு காட்டு வெள்ளம் போல் வேகம் மிக்கதாய் இருக்கும். 
  |